காவல் துறையில் 90 நபர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கிய முதல்வர் எடப்பாடி..!

கடந்த 2016– 2019ஆம் ஆண்டுகளுக்கான காவல் துணை கண்காணிப்பாளர் பணியிடங்களுக்கு தமிடிநநாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (குரூப் - 1) மூலமாக தெரிவு செய்யப்பட்ட 90 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, 14 நபர்களுக்கு காவல் துணை கண்காணிப்பாளர் பணியிடங்களுக்கான பணிநியமன ஆணைகளை இன்று தலைமை செயலகத்தில் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.


மேலும், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையில், மாவட்ட அலுவலர் பணி இடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (குரூப் - 1) மூலம் தெரிவு செய்யப்பட்ட 3 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளையும் எடப்பாடி. பழனிசாமி வழங்கினார்.

அதேபோன்று, நெடுஞ்சாலைத் துறையில் 105 இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக தமிழ்நாடு அமைச்சுப்பணி தொகுதியின் கீழ் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணைகளையும் இன்று முதல்வர் வழங்கினார். 

இந்த நிகழ்வில் தலைமை செயலாளர் சண்முகம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே. பிரபாகர், காவல்துறை தலைமை இயக்குநர் திரிபாதி தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை இயக்குநர் (முழு கூடுதல் பொறுப்பு) முனைவர் சி. சைலேந்திர பாபு மற்றும் பலர் கலந்துகொண்டனர்.