வழிபாட்டு தலங்கள் பொதுமக்கள் தரிசனத்திற்கு எடப்பாடி பழனிசாமி திடீர் அனுமதி!

கொரோனா காலத்தை முன்னிட்டு அனைத்து மதத்தினரும் இறை வழிபாட்டை தொடர முடியாமல் சிரமப்பட்டு வந்தனர். இந்த நிலையில், படிப்படையாக பல்வேறு தளர்வுகளை அறிமுகப்படுத்தி வருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.


ஏற்கனவே ஊராட்சி, பேரூராட்சி மற்றும் நகராட்சிப் பகுதிகளில் உள்ள சிறிய திருக்கோயில்கள், சிறிய மசூதிகள், தர்க்காக்கள், தேவாலயங்கள் ஆகிய வழிபாட்டு தலங்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர்களின் அனுமதியுடன் பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்பட்டுள்ளது.  

இந்த நிலையில், தற்போது மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள சிறிய திருக்கோயில்கள்; அதாவது, 10,000 ரூபாய்க்கும் குறைவாக ஆண்டு வருமானம் உள்ள திருக்கோவில்களிலும், சிறிய மசூதிகளிலும், தர்க்காக்களிலும், தேவலாயங்களிலும் மாவட்ட ஆட்சித் தலைவர்களின் அனுமதியுடன் 10.8.2020 முதல் பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்படுகிறது.

சென்னை மாநகராட்சிப் பகுதியில் இதற்கான அனுமதியை சென்னை மாநகராட்சி ஆணையரிடம் பெற வேண்டும். மற்ற மாநகராட்சிப் பகுதிகளில் இதற்கான அனுமதியை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவரிடம் பெற வேண்டும். 

கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த, அரசின் நிலையான வழிகாட்டி முறைகளை பொதுமக்கள் கடைபிடிக்கவும், ஒத்துழைப்பு வழங்கவும் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி.