முதல்வரே ஓடிப்போலாமா?

கஜா புயல் பாதிப்பை பார்வையிடச் சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பாதியிலே திரும்பியிருப்பது மாபெரும் சர்ச்சையைக்கிளப்பியிருக்கிறது.


முதல்வர் பழனிச்சாமி கஜா புயல் பாதிப்புகளை பார்வையிடச் சென்றதே டூ லேட். அவர் ஹெலிகாப்டர் மூலம் பார்வையிடப் போகிறார் என்றதும் தமிழகமே அதிர்ந்து நின்றது. ஏனென்றால், வெள்ளம் அளவுக்கு அதிகமாக இருக்கும் நேரத்தில், தண்ணீருக்குள் சென்று மக்களை பார்வையிட இயலாது என்ற சூழலில்தான் ஹெலிகாப்டர் பயன்படுத்துவது வழக்கம். அதனால் ஒருவேளை மக்களை ஹெலிகாப்டரில் சென்று பார்வையிடப் போகிறாரோ என்று அலறினார்கள். நல்லவேளையாக கார் மூலம் பல்வேறு ஊர்களுக்குச் செல்வதற்கு வசதியாக மட்டுமே ஹெலிகாப்டரை பயன்படுத்தினார்.

முதலில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மாப்பிள்ளையார்குளம், மச்சுவாடி போன்ற கிராமப்பகுதிகளுக்குச் சென்று அங்கு பாதிக்கப்பட்டிருந்த மக்களுக்கு  அரிசி, வேட்டி, சேலை  அடங்கிய நிவாரணப் பொருட்களை வழங்கினார். அதேபோன்று புயலால் உயிர் சேதம் அடைந்த குடும்பத்தினருக்கு நிவாரணத் தொகை வழஙகினார். அடுத்தபடியாக பட்டுக்கோட்டை அருகே சூரப்பள்ளம் என்ற பகுதிக்கு எடப்பாடி சென்று, முறிந்துகிடந்த தென்னை மரங்களை பார்வையிட்டார். அங்கேயும் இழப்பீட்டுத் தொகை வழங்கினார்.

இதையடுத்து மேலும் பல்வேறு ஊர்களுக்குச் செல்லவேண்டிய நிலையில், அடுத்தடுத்த ஊர்களில் உள்ள மக்கள் கடுமையான கோபத்தில் இருப்பதாக முதல்வருக்கு சொல்லப்பட்டது. குறிப்பாக முதல்வர் பழனிசாமியின் காரை வழிமறித்து, திருவாரூர் - திருத்துறைப்பூண்டி சாலையில் மறியலில் ஈடுபடுவதற்கு கூடூர் பகுதி மக்கள் தயாராக இருப்பதாக சொல்லப்பட்டது. கோபத்தில் கல் எறிவதற்கு வாய்ப்பு உண்டு என்றும் பிடித்து வைக்கவும் செய்யலாம் என்று கூறப்பட்டது.

அதனால் மேற்கொண்டு செல்வது பாதுகாப்பு அல்ல என்று தகவல் தெரிவித்தனர். முதல்வரை காப்பதற்கு மக்களை தாக்க நேர்ந்தால், அது தேவையில்லாத சர்ச்சையை உருவாக்கும் என்றும் முதல்வருக்கு எடுத்துச் சொல்லப்பட்டதாம். அதனாலே  பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டு, வானிலை காரணமாக காட்டப்பட்டது. தங்கள் பகுதிக்கு முதல்வர் வருவார் என்று ஆவலுடன் காத்திருந்த மக்கள் கடுமையான ஏமாற்றத்துக்கு ஆளானார்கள். முதல்வரே ஓடிப்போலாமா என்று கேள்வி எழுப்புகிறார்கள்.  மேலும் துன்பத்தில் பெரும் துன்பமாக ஏற்கெனவே கடுமையான காற்றால் பாதிக்கப்பட்ட டெல்டா மக்கள், இன்று பெரும் மழையில் அவதிப்பட்டு வருகின்றனர்.

கன மழை பெய்ததால் நாகை, திருவாரூர் போன்ற மாவட்டங்களுக்கு செல்ல முடியவில்லை என்று திரும்பியிருக்கும் முதல்வர், மற்ற அமைச்சர்களும், அதிகாரிகளும் உள்ளே சென்று நிவாரணப் பணிகளில் ஈடுபடுவார்கள் என்று சொல்லியிருக்கிறார்.

அது எப்படி ஆபிஸர்...உங்களால மட்டும் போகமுடியாத இடத்துக்கு அவங்க போவாங்க?