அடேங்கப்பா… இத்தனை கோயில்களுக்கு எடப்பாடி பழனிசாமி வசதிகள் செய்து கொடுத்திருக்கிறாரா..?

தலைமைச் செயலகத்தில், இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு இந்து கோயில் திருப்பணிகளுக்கான திட்டப்பணிகளை திறந்து வைத்தார்.


இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ஈரோடு, திருவள்ளூர், தஞ்சாவூர், திருப்பூர் மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள திருக்கோயில்களில் 3 கோடியே 46 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இளைப்பாறும் மண்டபம், நவீன முடிகாணிக்கை மண்டபம், 2 அன்னதானக் கூடங்கள், இணை ஆணையர் / செயல் அலுவலர் அலுவலகக் கட்டடத்தின் முதல் தளம் ஆகிய கட்டடங்களை திறந்து வைத்தார்கள். 

தமிழ் பண்பாட்டின் பெட்டகமாகவும், ஆன்மீகத்தின் இருப்பிடமாகவும், கலைத்திறனின் நிலைக்களமாகவும் விளங்குகின்ற திருக்கோயில்களின் சொத்துக்களை பாதுகாத்து பராமரிப்பது, அன்றாடப் பூஜைகள் தங்குதடையின்றி நடப்பதை உறுதி செய்வது, பக்தர்களுக்குத் தங்கும் வசதிகளை செய்து கொடுப்பது போன்ற பணிகளை, மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு, இந்து சமய அறநிலையத் துறை மூலமாக செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், சென்னிமலை, அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயிலில் 2,944 சதுர அடி பரப்பளவில் 68 லட்சத்து 33 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இளைப்பாறும் மண்டபம்; திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி வட்டம், திருத்தணி, அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயிலில் 6,283 சதுர அடி பரப்பளவில் 95 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நவீன முடிகாணிக்கை மண்டபம்;

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், திருக்கருகாவூர், அருள்மிகு முல்லைவனநாதசுவாமி திருக்கோயிலில் 2,605 சதுர அடி பரப்பளவில் 52 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அன்னதானக்கூடம் மற்றும் திருப்பூர் மாவட்டம், அவிநாசி வட்டம் மற்றும் நகர், அருள்மிகு அவிநாசிலிங்கேசுவரர் திருக்கோயிலுக்கு சொந்தமான இடத்தில் 2,604 சதுர அடி பரப்பளவில் 65 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அன்னதானக்கூடம்;

திருச்சிராப்பள்ளி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், சமயபுரம், அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலுக்கு சொந்தமான இடத்தில் 4,050 சதுர அடி பரப்பளவில் 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இணை ஆணையர் / செயல் அலுவலர் அலுவலகக் கட்டடத்தின் முதல் தளம்; என மொத்தம் 3 கோடியே 46 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இந்து சமய அறநிலையத் துறை கட்டடங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று திறந்து வைத்தார்கள்.