கள்ளக்குறிச்சி அருகே மின்வாரியத்தில் உயர் அதிகாரி கொடுத்த பணி தொந்தரவால் உதவி பெண் பொறியாளர் ஒருவர் ரத்த அழுத்த மாத்திரையை விழுங்கி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உயர் அதிகாரி தொடர் தொந்தரவு! மின்வாரிய ஆபிசில் இளம் பெண் ஊழியர் செய்த விபரீதம்!
கள்ளக்குறிச்சி அருகே சடையம்பட்டி மின் வாரிய அலுவலகத்தில் உதவி மின் பொறியாளராக பணியாற்றி வருபவர் சிந்து பைரவி. இவர் அந்த அலுவலகத்தில் பல ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார் இந்நிலையில் கடந்த 13 ஆம் தேதி அலுவலகத்தில் திடீரென மயக்கம் போட்டு விழுந்தார்.
இந்நிலையில் பதறிப்போன மின்வாரிய அதிகாரிகள் உடனே அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் மருத்துவர்களிடம் கேட்டபோது அப்போது அவர்கள் சிந்துபைரவி உயர் ரத்த அழுத்த மாத்திரைகளை அதிகம் விழுங்கியதால் மயக்கம் போட்டு விழுந்துள்ளார், எனவும் தற்போது உயிருக்கு எந்த ஒரு ஆபத்தும் இல்லை எனவும் தெரிவித்தனர்.
சுயநினைவிற்கு வந்த சிந்துபைரவியிடம் அருகிலிருந்தவர்கள் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்தபோது தனது உயர் அதிகாரி தனக்கு பணியில் அதிக தொந்தரவு கொடுப்பதாகவும், அவர் கூறும் இடத்தில் கையெழுத்து போடுமாறு கூறியுள்ளதாகவும். பல்வேறு அரசியல் பிரமுகர்களிடம் லஞ்சம் வாங்கிக் கொண்டு அவர்கள் கூறும் செயலை செய்யுமாறும் தனக்கு கட்டளையிட்டதாக அப்பெண் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் காவல்துறையில் புகார் அளித்தும் எந்த ஒரு பலனும் இல்லை எனவும் சிந்து பைரவி வருத்தத்துடன் தெரிவித்தார். இதுகுறித்து சிந்து பைரவி தன்னை தொடர்ந்து தொந்தரவு செய்யும் உயர் அதிகாரியின் கீழ் பணிபுரிய முடியாது எனக் கூறி முதலமைச்சர், மின் துறை அமைச்சர், தலைமை பொறியாளர் ஆகியோருக்கு கடிதம் எழுதி உள்ளார்.
இதையடுத்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சிந்துபைரவி கூறிய அனைத்தையும் அறிக்கையாக பதிவு செய்து மின் வாரிய உயர் அதிகாரி மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளனர். இந்த புகார் குறித்து மின்வாரிய உயர் அதிகாரியிடம் தொடர்பு கொண்டு பேசிய போது அவர் இதற்கு தகுந்த பதில் கூறவில்லை எனவும் போலீசார் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.