அவள் கணவனை கொன்றுவிட்டேன்..! இப்போது எனக்கு கட்டிக் கொடுங்க..! கள்ளக்காதலி தாயை அதிர வைத்த கள்ளக்காதலன்! விருதுநகர் சம்பவம்!

விருதுநகரில் உள்ள ஆணை குழாய் மேலத் தெருவை சேர்ந்த 28 வயதான மணிகண்டன் என்பவர் தனியார் வங்கியில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் காந்தி நகரை சேர்ந்த 21 வயதான ஜோதி லக்ஷ்மி என்பவருக்கும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு ஜோதிலட்சுமியின் பெற்றோர்களான சிவகுமார் மற்றும் சித்ரா தேவி ஆகியோர் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தனர். பெற்றோர்களை கவனித்துக் கொள்வதற்காக மகள் ஜோதிலட்சுமி தனது குழந்தையுடன் அம்மா வீட்டுக்கு வந்திருக்கிறார். அதைப்போல 24 வயதான அவர்களது உறவினர் கார்த்திக் என்பவரும் மருத்துவமனையில் உடன் இருந்தார்.

இந்நிலையில் ஜோதி லட்சுமிக்கும் கார்த்திக் ஆகிய இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. சில நாட்களில் ஜோதிலட்சுமியின் பெற்றோர்கள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். எனவே ஜோதிலட்சுமி தனது அம்மா வீட்டிலிருந்து கணவர் வீட்டுக்கு சென்றுவிட்டார். மனைவி ஜோதிலட்சுமி நீண்ட நேரமாக போனில் பேசிக் கொண்டிருப்பதை கண்ட அவரது கணவர் மணிகண்டன் அவரை கண்டித்திருக்கிறார்.

இதனால் இவர்களுக்கு ஏற்பட்ட சண்டையில் ஜோதிலட்சுமி கணவரிடம் கோபித்து கொண்டு தனது அம்மா வீட்டுக்கு சென்று உள்ளார். இதை அறிந்த அவரது உறவினர் கார்த்திக் ஜோதிலட்சுமியின் வீட்டுக்கு சென்று அவர்களது பெற்றோர்களிடம் ஜோதி லட்சுமியை தனக்கு திருமணம் செய்து கொடுக்குமாறு கேட்டு இருக்கிறார். ஜோதிலட்சுமி ஏற்கனவே திருமணம் ஆகி இருந்ததால் அவரது பெற்றோர்கள் மறுத்து விட்டனர். 

இந்நிலையில் வழக்கம் போல ஜோதிலட்சுமியின் கணவர் மணிகண்டன் வேலைக்கு சென்று கொண்டிருக்கும் போது, கார்த்திக் அவரை வழிமறித்து ஜோதிலட்சுமியின் பெற்றோர்கள் குடும்ப பிரச்சனை குறித்து சமரசம் செய்ய தங்களை அழைக்கிறார்கள் என்று கூறி மணிகண்டனை தனியாக அழைத்துச் சென்று கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். பின்னர் ஜோதிலட்சுமி அம்மாவிடம் சென்று உங்களது மருமகனை நான் கொலை செய்துவிட்டேன். இப்போது ஜோதிலட்சுமியை எனக்கு கல்யாணம் செய்து வையுங்கள் என்று பேசி அதிர்ச்சி அளித்துள்ளார். 

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த ஜோதிலட்சுமி பெற்றோர்கள் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். போலீசார் கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து கொலை செய்த கார்த்திக் என்பவரை வலைவீசி தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.