பிஞ்சு குழந்தையை குடிகார தந்தை அடித்து கொலை செய்துள்ள சம்பவமானது சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாயும் மப்பு..! தந்தையும் மப்பு..! பிறந்த குழந்தைக்கு வீட்டில் நிகழ்ந்த துயரம்! குடியை கெடுத்த குடி!
சென்னையில் எம்.ஜி.ஆர் நகர் என்னும் பகுதி அமைந்துள்ளது. இப்பகுதிக்குட்பட்ட டாக்டர் அம்பேத்கர் காலனியில், எல்லப்பன் என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் துர்கா என்ற பெண் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 2 ஆண்டுகளாக கணவரை பிரிந்து தன்னுடைய குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார்.
இந்நிலையில் எல்ப்பனுக்கும், துர்காவுக்கும் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. நெருக்கமானது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனிடையே இருவரும் திருமணம் செய்து கொண்டனர். 2.5 மாதங்களுக்கு முன்னர் இருவருக்கும் ஒரு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் எல்லப்பனுக்கு தினமும் குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் துர்காவுக்கும் குடிப்பழக்கம் ஏற்பட்டது.
இதனால் கணவன்-மனைவி இடையே அவ்வப்போது கடுமையான தகராறுகள் ஏற்பட்டுள்ளன. இன்று காலையில் வழக்கம் போல இருவருக்குமிடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது பசியில் அழுது கொண்டிருந்த 2.5 மாத குழந்தையை எல்லப்பன் கடுமையாக தாக்கியுள்ளார். தலையில் பயங்கரமாக அடிபட்டதை தொடர்ந்து குழந்தை பேச்சு மூச்சின்றி கிடந்தது.
உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு குழந்தையை எடுத்து சென்றனர். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இதனால் அதிர்ச்சி அடைந்த இருவரும் தங்களை காப்பாற்றிக்கொள்வதற்காக திட்டம் தீட்டினர். அதாவது வீட்டிற்கு சென்று குழந்தையின் உடைகளை மாற்றி, மூக்கில் வழிந்த ரத்தத்தை துடைத்து 108 ஆம்புலன்ஸுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். அவர்கள் மீண்டும் குழந்தையை ஏற்கனவே பரிசோதித்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
முன்னதாக குழந்தையை பரிசோதித்த மருத்துவரே இம்முறையும் பரிசோதித்துள்ளார். ஏற்கனவே இறந்து விட்டதாக கூறிய குழந்தையை மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்து வந்ததில், மருத்துவருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர் அப்பகுதி காவல்நிலையத்தில் தகவலை தெரிவித்தார்.
காவல்துறையினர் விரைந்து வந்து கணவன்-மனைவியிடம் விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது எல்லப்பன் தலையில் அடித்து தான் குழந்தை இறந்தது என்பது காவல்துறையினருக்கு தெரியவந்தது. வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இந்த சம்பவமானது எம்ஜிஆர் நகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.