அடிக்கடி சண்டை போடுவோம்..! துப்பாக்கியால் சுட்டுக் கொண்ட டாக்டரின் மனைவி கூறிய அதிர்ச்சி தகவல்!

நாட்டுத்துப்பாக்கியால் திமுகவின் நாமக்கல் மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளரான மருத்துவர் ஆனந்த் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


நாமக்கல் மாவட்டத்தில் பரமத்திவேலூர் எனும் பகுதி அமைந்துள்ளது. இதனருகேயுள்ள சுல்தான்பேட்டை எனுமிடத்தில் கண், காது, மூக்கு மருத்துவராக டாக்டர் ஆனந்த் பணியாற்றி வந்தார். இவருடைய மனைவியின் பெயர் தமிழ்ச்செல்வி. இவருக்கு அபூர்வா என்ற 17 வயது மகளுள்ளது குறிப்பிடத்தக்கது.

இவர் நேற்று காலையில் வெளிநோயாளிகளை மருத்துவமனையில் சந்தித்தார். அவருக்குக் கீழ் 3 பெண்கள் எப்பொழுதும் பணியாற்றுவர். அவர்களுக்கு சம்பளத்தை முன்கூட்டியே தந்துவிட்டார். " நான் தானே தருகிறேன். தைரியமாக வாங்கிக்கொள்ளுங்கள். இனிமேல் வெளி நோயாளிகளை கவனிக்க மாட்டேன்" என்று கூறிவிட்டு அவருடைய பண்ணை வீட்டிற்கு சென்றுள்ளார்.

அவருடைய பெரியப்பா மகனுக்கு அழைப்பு விடுத்து தற்கொலை செய்து கொள்வதாக கூறினார். உடனடியாக உறவினர்களை அழைத்துக்கொண்டு பெரியப்பாவின் மகன் பண்ணை வீட்டிற்கு சென்றார். உறவினர்கள் வருவதை கண்ட ஆனந்த் நாட்டுத்துப்பாக்கியால் கழுத்தில் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். சம்பவம் அறிந்த காவல்துறையினர் பண்ணை வீட்டிற்கு விரைந்து சென்றனர்.

இறந்து கிடந்த ஆனந்தின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவர் நாமக்கல் மாவட்டம் திமுக மருத்துவ அணி அமைப்பாளராக பொறுப்பு வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தன் கணவர் தற்கொலை செய்துகொண்டு இறந்து கிடந்ததைக் கண்ட தமிழ்செல்வி மிகவும் மனமுடைந்தார். 

காவல்துறையினர் அவரிடம் நடத்திய விசாரணையில், "எனக்கும் என் கணவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படும். அப்புறம் இருவரும் சமாதானம் ஆகி விடுவோம். இரண்டு நாட்களுக்கு முன்பு கூட சண்டை போட்டு கொண்டோம். என் கணவர் இல்லாத வாழ்க்கையை வாழ்வதற்கு எனக்கு பிடிக்கவில்லை" என்று கூறியுள்ளார்