நித்தி ஆசிரமத்தில் இருந்து மீண்ட தேனி டாக்டர் மாயம்..! கைலாச நாட்டிற்கு தப்பிச் சென்றாரா?

நித்யானந்தா ஆசிரமத்தில் இருந்து வீடு திரும்பிய பெரியகுளத்தை சேர்ந்த மருத்துவர் மனோஜ்குமார் மீண்டும் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் பகுதியை சேர்ந்தவர் மருத்துவர் மனோஜ் குமார் ஆவார். இவர் அதே பகுதியில் இயங்கி வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணியாற்றி வந்தார். மருத்துவர் மனோஜ் குமாருக்கு வனிதா என்ற ஒரு சகோதரி இருக்கிறார். வனிதாவிற்கு நிவேதா(வயது 21) என்ற ஒரு மகளும் இருக்கிறார்.

இந்நிலையில் மருத்துவர் மனோஜ் குமாரும் நிவேதாவும் இணைந்து கடந்த ஆண்டு பெங்களூருவில் அமைந்திருக்கும் நித்யானந்தா ஆசிரமத்திற்கு சென்றனர். ஆஸ்ரமத்திற்கு சென்ற அவர்கள் இருவரும் வீடு திரும்பவில்லை. அவர்கள் இருவரையும் வீட்டுக்கு அழைத்தபோது தாங்கள் இருவரும் அங்கேயே தங்கியிருந்து நித்யானந்தாவின் தீட்சை பெறப்போவதாக கூறியிருக்கின்றனர்.குடும்பத்தினர் எவ்வளவோ அழைத்தும் அவர்கள் இருவரும் ஆசிரமத்தை விட்டு வெளியே வரவில்லை.

ஆகையால் மருத்துவரின் குடும்பத்தினர் பெங்களூருவில் அமைந்திருக்கும் ஆசிரமத்திற்கு சென்று மனோஜ் குமாரையும் நிவேதாவையும் காண்பதற்காக சென்றுள்ளனர். ஆனால் அவர்கள் இருவரையும் காண சென்றவர்களை நித்யானந்தா ஆசிரமத்தை சேர்ந்தவர்கள் விரட்டி அடித்துள்ளனர் . உடனே அவர்கள் தேனி மாவட்டம் எஸ்பி .பாஸ்கரன் என்பவரிடம் புகார் அளித்தனர். புகாரை பெற்றுக் கொண்ட போலீஸ் அதிகாரி வழக்கை பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டார்.

இதனையடுத்து நித்யானந்தா ஆசிரமத்தில் வசித்து வந்த மனோஜ் குமார் மற்றும் நிவேதா ஆகிய இருவரையும் போலீசார் மீட்டெடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்கள் இருவரையும் குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். ஆனால் மருத்துவர் மனோஜ்குமார் வீட்டிற்கு வந்த ஓரிரு நாட்களிலேயே தன்னால் வீட்டில் இருக்க முடியாது என்றும் தான் மீண்டும் ஆஸ்ரமத்திற்கு செல்ல போவதாகவும் கூறியிருக்கிறார். 

பின்னர் அவருடைய குடும்பத்தினரின் கட்டாயத்தால் மீண்டும் மருத்துவராக தேவாரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிந்து வந்திருக்கிறார். இந்நிலையில் மருத்துவர் மனோஜ் குமார் கடந்த ஒரு மாத காலமாக மீண்டும் காணாமல் போய்விட்டார் . அவர் எங்கு சென்றார் என்று யாருக்குமே தெரியவில்லை. அதனால் மனோஜ்குமார் என் தந்தை பெரியகுளம் காவல் நிலையத்தில் தன் மகனை காணவில்லை என்று புகார் அளித்துள்ளார். போலீஸ் அதிகாரிகள் இந்த வழக்கை பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒருவேளை மீண்டும் மருத்துவர் மனோஜ்குமார் நித்தியானந்தாவின் கைலாச நாட்டிற்கு தப்பி சென்றுவிட்டாரா?  என்றும் சந்தேகம் நிலவி வருகிறது.