ரயில் தடங்களை தனியார்களிடம் ஒப்படைக்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் - இந்திய கம்யூனிஸ்ட்

ரயில் தடங்களில் தனியார்களை அனுமதிக்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.


ரயில் தடங்களை தனியார்களிடம் ஒப்படைக்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கோரிக்கை விடுத்துள்ளது. .

நாடு முழுவதும் உள்ள 109 ரயில்வே வழித்தடங்களில் 151 ரயில்களை தனியார் இயக்க அனுமதி வழங்கப்படும் என இந்திய ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. இது நாட்டின் பொருளாதார சுயசார்பை தகர்த்து விடும் அபாயகரமான செயலாகும். ஏற்கனவே பயணிகள் ரயில்களை விரைவு ரயில்களாக மாற்றப்பட்டுள்ளன. ரயில்வேக்கு சொந்தமான பல நூறு ஏக்கர் நிலங்கள் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. பொருள் போக்குவரத்தில் தனியார் அனுமதிக்கப்பட்டுள்ளனர்  

இதன் தொடர்ச்சியாக, தற்போது ரயில் வழித்தடங்களும் தனியார்களிடம் ஒப்படைக்கப்படுகிறது. இது தொடரும் எனில், பாரம்பரிய பெருமை வாய்ந்த இந்திய ரயில்வே முழுமையாக தனியார் வசம் சென்றுவிடும். இதனால் சாதாரண மக்களுக்கு ரயில் பயணம் எட்டாத உயரத்துக்கு சென்று விடும். விமானம் மற்றும் பேருந்து கட்டணங்களை அடிப்படையாகக் கொண்டு தனியார் ரயில்களில் கட்டணங்கள் நிர்ணயிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் மூத்த குடிமக்கள், நாட்டின் விடுதலைப் போராட்ட வீரர்கள், விளையாட்டு வீரர்கள், கலைத்துறையினர், மாணவர்கள் என பல்வேறு தரப்பினருக்கும் கிடைத்து வரும் சலுகைக் கட்டணங்கள் அனைத்தும் ரத்தாகி விடும்.

பல தரப்பிலும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் இரயில்வே வழித்தடங்களில் தனியார்கள் ரயில்கள் இயக்க அனுமதிக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கடுமையாக எதிர்க்கிறது. மத்திய அரசின் மக்கள் விரோதச் செயலை வன்மையாக கண்டித்துள்ளார் இரா.முத்தரசன்.