தீபாவளிக்கு பூஜிக்கவேண்டிய மகாலட்சுமி நாமங்கள்! செல்வமும் நலமும் வீடு தேடி வரட்டும்!

தீபாவளி என்றாலே மகாலட்சுமி வழிபாடு முக்கியத்துவம் பெறுகிறது.


அன்னை மகாலட்சுமி இரண்டு ரூபங்கள் உண்டு. ஒன்று ஸ்ரீதேவி என்ற லட்சுமி. மற்றொன்று பூதேவி என்ற பூமா தேவி. லக்ஷ்மிக்கு பல திருநாமங்கள் உண்டு. மகாலட்சுமி வைகுண்டத்தில் ரமாதேவி, சொர்க்கத்தில் சொர்க்க லட்சுமி,  பூவுலகில் நாகலட்சுமி, அரசர்களிடம் ராஜ லட்சுமி, விலங்குகளிடத்தில் சோம லட்சுமி, புண்ணியவான்களீடம் பரீதி லட்சுமி, வேதாந்திகளிடம் தயா லட்சுமி என்று பல நாமங்களில் இருக்கிறாள். 

பகவான் மார்பில் உள்ள லட்சுமிக்கு யோகலட்சுமி என்றும் இரு பக்கமும் உள்ள தாயாருக்கு போக லட்சுமி என்றும், தனிச் சன்னதியில் அருள் புரிபவளுக்கு வீரலட்சுமி என்றும் பெயர். தங்க மழை பொழிந்தால் கனகதாரா என்று பெயர். லக்ஷ்மி மாதுளங்கனியில் உதித்ததால் மாதுளங்கி என்றும் பத்மாசனனால் வளர்க்கப்பட்டதால் பத்மை என்றும்,

அக்னிக் குண்டத்தில் வாசம் செய்ததால் அக்னி கர்ப்பை என்றும், ரத்தின வடிவம் எடுத்ததால் ரத்னாவதி என்றும், ஜனகருக்கு மகளானதால் ஜானகி என்றும், பூமியில் கலப்பை நுனியில் வெளிப்பட்டதால் சீதை என்றும், பாற்கடலில் தோன்றியதால் ஸ்ரீ என்றும் போற்றப்படுகிறாள். 

அக புற அழகும் திருமண வாழ்வும் தருபவன் ஆதிலட்சுமி என்றும், குழந்தைப் பேறு தருபவள் சந்தான லட்சுமி என்றும், கல்வி கலைஞானங்கள் தருபவள் வித்தியாலட்சுமி என்றும், சகல செல்வங்களையும் வழங்குபவள் தனலட்சுமி  என்றும், தானியங்களைச் செழிக்கச் செய்பவள் தான்யலட்சுமி என்றும், ராஜபோக வாழ்வளிப்பவள் கஜலட்சுமி என்றும், மன உறுதி, உடல் உறுதி, செயலாற்றல் தருபவள் வீர லட்சுமி, வெற்றிகளைக் குவிப்பவள் விஜயலட்சுமி என்றும் அழைக்கப்படுகிறாள். 

மேலும் இவளுக்கு அம்ருதோத்பவா, கமலப்ரோகிதா, சந்திரசோதரா, தேவ தேவிகா, மகாதேவி, விஷ்ணு வல்லபா, ஹரிவல்லபா, சாரங்கிணப்ரோகிதா என்ற திருநாமங்களும் உண்டு. வேண்டும் வரங்களைத் தருவதால் வரலட்சுமி என்றும் அழைப்பர். இப்படிப் பலப்பல திருநாமங்களுடன் திகழ்கிறாள் திருமகள்.