கமல்ஹாசனைப் பார்த்து ஸ்டாலின் காப்பியடித்தாரா..? டென்ஷன் ஆகும் மய்யம்

ரேஷன் கார்டுக்கு ஆயிரம் ரூபாய் என்ற ஸ்டாலினின் அறிவிப்பு, அப்பட்டமான கமல் திட்டத்தின் காப்பி என்று மய்யத்து ஆட்கள் கடுப்பாகிறார்கள். நடிகை ஸ்ரீபிரியா தொடங்கி அத்தனை பேரும் ஸ்டாலினுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.


அந்த வகையில் கமல் கட்சியைச் சேர்ந்த தொல்காப்பியனின் பதிவு இது. தன்னை ஆதரிக்கும் அத்தனை பேர்களையும் முட்டாளாக்கிக் கொண்டு இருக்கிறார் மு.க.ஸ்டாலின். பாவம்! அவரால் வேறு என்னதான் செய்ய முடியும்!!!

யாரிடம் கொள்கை இல்லை என்று சொன்னாரோ, யாருக்கு அரசியல் வரலாறு இல்லை என்று பழித்தாரோ, யாரை பார்த்து தனக்கு ஒரு பொருட்டே இல்லை என்று இகழ்ந்தாரோ

அவருடைய, தலைவர் கமலுடைய, மக்கள் நீதி மய்யத்தினுடைய கொள்கைகளையும், கோட்பாடுகளையும், சமூக நீதிக்கான அறிக்கைகளையும் அப்படிக்கு அப்படியே எடுத்து ஆளுகிறார், அவற்றை திமுகவின் தேர்தல் அறிக்கையாக வெளியிடுகிறார் ஸ்டாலின்!

தலைவர் கமல் 5 வருஷத்துல 50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தருவோம் என்று கூறினார். அதையே ஸ்டாலின் 1 வருஷத்துக்கு 10 லட்சம் வேலைவாய்ப்பு என்கிறார்! தலைவர் கமல் இல்லத்தரசிகளுக்கு ஊதியம் என்றார். அதையே, ஸ்டாலின் குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் என்கிறார்!

இவர்களுக்கு சொந்தமாக அறிவு இருக்காது என்பதற்காகத்தான் திட்டங்களை சொன்னால் காப்பி அடித்து விடுவார்கள் என்று தலைவர் கமல் அன்றே சொன்னார். ஆழ்வார்பேட்டையை சுற்றித்தான் படித்துரை பாண்டிகள் வலம் வருவார்கள் என்று தலைவர் கமல் முன்பே தெரிந்து வைத்து இருந்திருக்கிறார்!

ஸ்டாலினை சமூக மாற்றத்துக்கான தலைவர் என்று போற்றிப் பாடும் இணைய உபிக்கள் எல்லாம் இப்போது கைத்தடிகளை தவறவிட்ட வயோதிகர்களாக வெட்கித் தலை குனிந்து தடுமாறி நிற்கிறார்கள்! காலம் மாறிவிட்டது; காட்சிகள் மாறி வருகின்றன; உபிக்கள் புரிந்து கொள்வதாக இல்லை!

கண்மூடிகளாக ஸ்டாலினை ஆதரிப்பதன் மூலம் சமூக கேடிகளாக மாறி வருகிறார்கள் உபிக்கள்! அதனால், தவறான இடத்தில் நிற்காதீர்கள்; உங்கள் அணி மக்கள் நீதி மய்யம்; அனைவரும் ஓரணியாய் திரண்டு பாசிச பாஜகவையும், அடிமை அதிமுகவையும், ஊழல் திமுகவையும் உருத் தெரியாமல் செய்ய மக்கள் நீதி மய்யத்திற்கு வந்து சேருங்கள் என்று அழைப்பு விடுத்திருக்கிறார்.