சாப்பிடும் உணவுக்கும் தோஷம் உண்டு தெரியுமா..? தோஷம் நீக்கும் வழிகள் இதோ...

அன்னம் என்பது நம்முடைய உயிரைத் தாங்குவது.


அது எங்கு, எந்த முறையில் யாரால் சமைக்கப்பட்டு பரிமாறப் படுகிறது என்பது மிகவும் முக்கியம். அதனால் தான் நம் முன்னோர்கள் உணவில் ஆசாரத்தை (சுத்தத்தை) கடைபிடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர்.

உணவில் ஐந்து வகையான தோஷங்கள் உள்ளன. அர்த்த தோஷம், நிமித்த தோஷம், ஸ்தனதோஷம், குணதோஷம், சம்ஸ்கார தோஷம்.

அர்த்த தோஷம்: நேர்மையற்ற வழியில் வரும் பணத்தினால் வாங்கப்படும் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் உணவுகளை உண்பதால் வருவதே அர்த்த தோஷம். நாம் சமைக்கும் உணவுப் பொருட்கள் நியாயமான சம்பாத்தியத்தில் வாங்கியதாக இருக்க வேண்டியது மிகமிக அவசியம்.

நிமித்த தோஷம்: நாம் உண்ணும் உணவை சமைப்பவர் நல்ல மனதுடன் இருக்க வேண்டியது மிகவும் அவசியம். அவர் நேர்மையானவராகவும், அன்பானவராகவும், நல்ல சுபாவம் உள்ளவராகவும் இருக்க வேண்டும். மேலும் சமைக்கும் உணவை எறும்புகள், பூச்சிகள், காகம், நாய் இவை தீண்டாமல் இருக்க வேண்டும். உணவில் புழுக்கள் தூசி, தலைமுடி போன்றவை இருக்கக் கூடாது. அசுத்தமான உணவு மன அசுத்தத்தை விளைவிக்கும். தீயவர் சமைத்த உணவை உண்டால் தீய எண்ணங்கள் வளரும்.

ஸ்தான தோஷம்: எந்த இடத்தில் உணவு சமைக்கப்படுகிறதோ அங்கு நல்ல அதிர்வுகள் இருக்கவேண்டும். சமைக்கும் பொழுதும் தேவையற்ற பிரச்சினைகள் அநாவசிய விவாதங்கள் நடந்தால் அந்த உணவு அசுத்தமாகிவிடும். யுத்தகளம், வழக்கு மன்றம் இவற்றின் அருகே சமைக்கப்படும் உணவு சாப்பிடுவதற்கு உகந்தது அல்ல.

குணதோஷம்: நாம் சமைக்கும் உணவில் அடங்கியிருக்கும் மூலப்பொருட்கள் சாத்வீக குணமுடையவையாக இருக்க வேண்டும். சாத்வீக உணவுகள் – பால், நெய், அரிசி, மாவு, பருப்புகள். ரஜோ உணவுகள் – புளிப்பு, உறைப்பு, உப்பு. தாமஸ உணவுகள் – பூண்டு, வெங்காயம், மாமிசம், முட்டை. சாத்வீக உணவு ஆன்மீக முன்னேற்றத்தை தருகிறது. ரஜோ உணவு உலக மாயையில் சிக்க வைக்கும் உணர்வைத் தூண்டி சுயநலத்திற்கு வழிவிடும். தாமஸ உணவு தீய எண்ணங்களை வளர வைக்கும்.

சம்ஸ்கார தோஷம்: தூய்மையாக உணவு சமைத்தாலும் உணவு வகைகள் ஒன்றுடன் ஒன்று மாறுபட்டு இருக்கக் கூடாது. அதிகமாக வேக வைத்தல், அதிக எண்ணெயில் வறுத்தல், பழைய உணவு போன்றவை தோஷமானவை. உடம்பிற்கும், உள்ளத்திற்கும் கேடு தருபவை. இதைத்தான் சம்ஸ்கார தோஷம் என்பார்கள்.

இந்த ஐந்து விதமான தோஷங்களை விலக்கி ஒருவன் உணவை உண்ண வேண்டும். அவரவர்களோ அல்லது அவர்களின் அன்னை, மனைவியால் இல்லத்தில் சமைத்து பரிமாறும் உணவை உண்பது மிகவும் நல்லது.