நோய் தீர்க்கும் தன்வந்திரி மந்திரம்! தன்வந்திரி ஆலயத்தை தரிசித்தாலே ஆரோக்கியம் தேடிவரும்!

இந்தக் கலிகாலத்தில் பல விதமான சிக்கலில் மாட்டிக் கொண்டு தவிக்கும் மக்களுக்கு நிம்மதி கிடைப்பதற்குப் பதிலாக கவலைதான் காத்திருந்து ஆட்கொள்கிறது.


புதிது புதிதான நோய்கள், குழந்தைப் பேறு இல்லாமை, தாம்பத்தியத்தில் கருத்து வேற்றுமை, தொழிலில் ஏற்படும் தோல்விகள், சக்திக்கு மீறிய கடன் தொல்லை, அதர்ம கார்யங்களில் ஈடுபடும் மனம் – இப்படித் தனி நபர் வாழ்க்கையில் ஆயிரமாயிரம் சிரமங்கள்.

ஒருவர் நோயில்லாமல் வாழ்ந்தாலே, அவருக்கு எந்த ஒரு குறையும் இல்லை என்று அறுதியிட்டுச் சொல்லி விடலாம். இன்று பலரது வாழ்க்கையும் சிக்கலாக இருப்பதற்கு முக்கியமான காரணம், மன அழுத்தம். இந்த மன அழுத்தம் எங்கே கொண்டு போய் விடுகிறது? சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், புற்று நோய், இதய வலி, அல்சர் என்று பட்டியல் நீள்கிறது.

நமக்கு ஏற்படும் சகல விதமான பிணிகளையும் தீர்த்து, நமக்கு இன்னருள் புரிந்து ஆட்கொள்பவர் கலியுக மாமருத்துவரான ஸ்ரீதன்வந்திரி பகவான் என்றால், அதுதான் நூற்றுக்கு நூறு உண்மை.

வாழ்க்கையில் சறுக்கி விடாமல் சகலமும் பெற்று நோயின்றி வளமுடன் வாழ வேண்டுமானால் நமக்கு ஒரு மகான் (குரு) நிச்சயம் தேவை. அப்படிப்பட்ட ஒரு சிறந்த மகான்தான் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள். இவர் வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை, அரசு மருத்துவ மனையில் தந்தை சீனிவாசனுக்கும் தாயார் கோமளவல்லி என்பவருக்கும் மகனாக பிறந்தவர்தான் ஸ்வாமிகள்.

பள்ளிப்பருவம் முதல் திருமணம் முடிந்த காலங்கள் மட்டும் ஸ்வாமிகள் பட்ட கஷ்டங்களை சொல்லி மாளாது. ஸ்வாமிகளின் 35வது வயதில் பலவிதமான இன்னல்களின் நடுவே வளர்த்து ஆளாக்கிய அன்னை கோமளவல்லி மிகவும் கொடிய வியாதியான புற்று நோயினால் பாதிக்கப்பட்டு இந்த புவியை விட்டு வைகுண்ட பதவி அடைந்தார்.

இந்த சம்பவம் ஸ்வாமிகளை மிகவும் பாதித்தது. ஆனாலும் அந்த அன்னை தனது மரணப் போராட்டத்தின்போதும் கூட தனது மகனிடம் கூறினார், நான் பட்ட இந்த துன்பம் இனி யாருக்கும் வரக் கூடாது, இது போன்ற நோய் எதிரிக்குக் கூட வரக்கூடாது, இதற்காக நீ ஏதாவது செய்தாக வேண்டும் என்று சத்திய வாக்கை பெற்றுக் கொண்டார்.

ஸ்வாமிகளும் அன்னைக்கு கொடுத்த வாக்கை எப்படி காப்பாற்றுவது என்று யோசித்த வேளையில், அவரது மனதில் தோன்றியதே இந்த தன்வந்திரி ஆரோக்ய பீடம். இன்று மக்கள் அதிக வேதனைக்குள்ளான ஒன்று அவர்களுக்கு ஏற்படும் நோய்களும் மன அழுததங்களும்தான். அப்படியானால் அந்த நோய்களை எப்படி தீர்ப்பது என்று யோசிக்கலானார். அப்போதுதான் அவரது உள்ளத்தில் தன்வந்திரி பகவான் உதித்தார்.

உடனடியாக சற்றும் தாமதிக்காமல் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தை அமைத்து அங்கு ஸ்ரீ தன்வந்திரி பகவானை மூலவராக ப்ரதிஷ்டை செய்து இதர 71 பரிவார தெய்வங்களையும், லிங்க வடிவிலான 468 சித்தர்களையும் ப்ரதிஷ்டை செய்து தேக நலம், தேச நலம் என்ற முறையில் சேவை செய்து வருகிறார்.

வேலூருக்கு அருகே வாலாஜாவில் (வாலாஜா – சோளிங்கர் சாலையில்) கீழ்ப்புதுப்பேட்டையில் அமைந்துள்ள இந்த ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் யக்ஞங்கள்தான் மிகச் சிறப்பு. உலக மக்களின் நலனுக்காக இங்கு சதா சர்வ காலமும் மந்திரங்கள் ஜபிக்கப்பட்டு பல அபூர்வ யாகங்கள் நடைபெற்று வருகின்றன.

ஸ்ரீ தன்வந்திரி பிரதிஷ்டை செய்யப் பெற்ற 15.12.2004-லிருந்து இன்றுவரை பல்லாயிரக்கணக்கான யாகங்கள் உலக நலன் கருதி நடந்தேறியுள்ளன. மந்திர ஒலிசக்தி குவிந்திருக்கிற இடங்களில் திருவருள் பிரகாசிக்கும் என்பர். அதற்கேற்ற மாதிரி இங்கு வந்து பிரார்த்திக்கும் பல பக்தர்களின் பிணிகளும் பனி போல் அகன்று சுகம் பெற்று வருகின்றனர் என்பது நிதர்சனம்.

ஸ்ரீதன்வந்த்ரி பகவானுக்குரிய இம்மந்திரத்தை தினமும் காலை, மதியம், மாலை மற்றும் இரவு வேளைகளில் 27 முறை கூறி தன்வந்திரி பகவானை வணங்க வேண்டும். மேலும் காலை சூரிய உதயத்தின் போது தன்வந்திரி பகவானை மனதில் எண்ணி இம்மந்திரத்தை கூறி வழிபட்டு வருவதால் நீங்கள் எத்தகைய நோயினால் பாதிக்கப்பட்டிருந்தாலும் அதன் கடுமை தன்மை குறையும். ஒரு சிலருக்கு அந்த நோய் முற்றிலும் நீங்க கூடிய நிலையையும் ஏற்படுத்துவார்.

ஸ்ரீ தன்வந்த்ரி மந்திரம்

சதுர்புஜம் பீத வஸ்திரம்

ஸர்வாலங்கார சோபிதம்

த்யோயேத் தன்வந்த்ரிம்

தேவம் ஸுராஸுர நமஸ்க்ருதம்.