குழந்தைக்கு பால் கொடுத்த மகேஸ்வரன்..! துரோணர் வழிபட்ட திருத்தலம்

மகாபாரதத்தில் கௌரவர்களுக்கு மட்டுமல்லாமல் பாண்டவர்களுக்கும் குருவாக விளங்கியவர் துரோணாச்சாரியார்.


அவர் ஒரு சமயம் ரிஷிகேஷம் சென்று கொண்டிருந்தார். வழியில் உத்தரகாண்ட் மாநிலத்தில் டேராடூனில் உள்ள ஒரு குகை கோவிலில் எழுந்தருளியிருந்த சிவலிங்கத்தை கண்டார். அங்கேயே தவம் இயற்றினார். தவத்திற்கு மெச்சிய ஈசன் அவர் முன் தோன்றி என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். தனக்கு வில் வித்தையில் தேர்ச்சி பெற்று சிறந்து விளங்கும்படியான ஒரு ஆண்பிள்ளை வேண்டுமென்றார் துரோணர். அதன்படியே வரம் அருளினார் ஈசன்.

விரைவிலேயே துரோணாச்சாரியாரின் மனைவி க்ரூபி என்ற கல்யாணி கருவுற்று ஆண்பிள்ளையைப் பெற்றெடுத்தாள். அதற்கு அஸ்வத்தாமன் என்று பெயரிட்டனர். க்ரூபிக்கு தாய்ப்பால் சுரக்காமல் போக குழந்தை பாலின்றி பசியில் துடித்தது. எனவே அப்பகுதியை ஆண்டுவந்த துருபதன் என்ற அரசனிடம் சென்று பாலுக்காக ஒரு பசுமாட்டினைக் கேட்டார் துரோணர். ஆனால் அரசர் பசுமாட்டை தர மறுத்து விட்டார்.

வேதனையோடு திரும்பிய துரோணர் அழுத குழந்தையை தேற்று உனக்கு அந்த பரமேஸ்வரன் தான் பால் கிடைக்க வரம் தருவான். நீ அவனை நினைத்து தவம் இயற்று என்று கூறினார். குழந்தை கதறி அழுதது. அதுவே தவம் என்பதால் பார்வதியும் பரமேஸ்வரனும் மாறுவேடத்தில் தோன்றினார்கள். அதோ அந்த குகைக்குள் போ, குகையின் சுவர்களில் இருந்து பால் சொட்டும், அதை பருகு என்று கூறிவிட்டு மறைந்தனர்.

அதன்படி அங்கே போக குழந்தையின் வாயில் பால் சொட்டு சொட்டாக விழுந்தது. குழந்தை பால் அருந்தி நிம்மதியானது. குகைக்குள் பாறையிலிருந்து தொடர்ந்து சொட்டிய பால் சில நாட்களில் ஓடை ஆனதாகவும், துரோணாச்சாரியார் தனது மனைவி குழந்தையுடன் அந்த குகைக்குள்ளேயே குடியிருந்து அங்கிருக்கும் சிவலிங்கத்தை பூஜித்து வந்ததாகவும் அவர்கள் காலத்திற்குப் பின் பாறையிலிருந்து நீர் சொட்டி வருவதாகவும் இக்கோயில் புராணம் கூறுகிறது.

ஹிந்தியில் டபக் என்றால் சொட்டுதல் என்று பொருளாகும். எனவே இங்குள்ள சிவலிங்கத்திற்கு டபக்கேஸ்வர் மகாதேவன் என்ற பெயர் வந்தது. புராணத்துடன் சம்பந்தப்பட்ட இக்கோவில் இயற்கை எழில் மிகுந்த நதியின் கரையோரத்தில் அமைந்துள்ளது. இது சுற்றுலா தலமாகவும், தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்லும் புனித தலமாகவும் உள்ளது.

மகாசிவராத்திரி இங்கே விமர்சையாக கொண்டாடப்படுகிறது. அன்று நடக்கும் ஆறுகால பூஜையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். திரயோதசி நாளில் சிவலிங்கத்தை ருத்ராட்சத்தால் அலங்காரம் செய்து வழிபடுகின்றனர். அதேபோல் சிவராத்திரி அன்று பாலபிஷேகம் செய்து ருத்ராட்சத்தால் அலங்காரம் செய்து பூஜிக்கின்றனர்.

இவரை வழிபடுவோருக்கு மன அமைதி, சுகமான வாழ்வு அமைகிறதாம். நீண்டகாலம் குழந்தை இல்லாத தம்பதியினர் குழந்தைப் பேறு வேண்டி இங்கு வந்து பிரார்த்தனை செய்வது வழக்கமாக உள்ளது. அவர்களுக்கு விரைவிலேயே நல்ல பலன் கிடைக்கிறது. புதிதாக திருமணம் செய்து கொண்டவர்கள் தங்கள் வாழ்வில் எந்தக் குறையும் இருக்கக் கூடாது என்பதற்காக குகையில் அருளும் ஈசனை வழிபட்டுச் செல்கின்றனர்.