உழைக்கும் தொழிலாளர்களுக்கு ஆபத்து..! நவம்பர் 26, மாபெரும் பொது வேலை நிறுத்தம். தயாராகும் தொழிற்சங்கங்கள்.

ஏஐடியூசி தொழிற்சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம், சென்னை. சிந்தாதிரிப்பேட்டையில் நாடாளுமன்ற உறுப்பினர் கே சுப்பராயன் தலைமையில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் நவம்பர் 26 பொது வேலை நிறுத்தத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


44 தொழிலாளர் சட்டங்களை மத்திய அரசு நான்கு சட்டங்களாக சுருக்கியுள்ளது. 150 ஆண்டுகளாக போராடிப் பெற்ற உரிமைகளை தொழிலாளர்களிடம் இருந்து பறித்து விட்டது. இனி நிரந்தரத் தொழிலாளர்கள் படிப்படியாக நீக்கப்படுவார்கள். தேவைப்பட்டால் வேலைக்கு அழைக்கவும், தேவையில்லை என்றால் வேலையை விட்டு நீக்கவும் இனி முடியும். மருத்துவவசதி, விடுப்பு, போனஸ், பணிக்கொடை உள்ளிட்ட சமூகப் பாதுகாப்பு கிடையாது என்ற நிலை விரைவில் உருவாகும்.

கட்டிட கட்டுமான உடலுழைப்புத் தொழிலாளர் நல வாரியங்கள் சிதைக்கப்படுகின்றன. அவை தற்போதுள்ள நிலையில் தொடர்ந்து செயல்படுவதற்கான உத்திரவாதம் இல்லை. அவர்களுக்கு வழங்க வேண்டிய நிதி பலன்கள் என்ன, திட்டங்கள் என்ன என்பதை இனி மத்திய அரசு தீர்மானிக்கும்.

 இதே போல 3 வேளாண் சட்டங்களால் விவசாயிகள் தீக்குள் தள்ளப்பட்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கி வந்த அரசு கொள்முதல் நிலையங்கள், ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள், குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்தல் ஆகியவை இனி மங்கி மறையும். பெருமுதலாளி வியாபாரிகளின் உத்தரவுக்கு ஏற்ப விவசாயம் செய்ய வேண்டிவரும். இந்த வர்த்தக சூதாட்டத்தில் விவசாயிகள் மிகுந்த துயரத்திற்கு ஆளாவார்கள்.

அத்தியாவசிய பொருட்கள் சட்டத்திலிருந்து, அரிசி, கோதுமை, உள்ளிட்ட தானிய வகைகள், கடலை, எள் போன்ற அனைத்து எண்ணெய் வித்துகள், உண்ணத் தகுந்த எண்ணெய்கள், வெங்காயம், உருளைக்கிழங்கு ஆகியவற்றை மத்திய அரசு நீக்கிவிட்டது. தற்போது பதுக்கல் கள்ளச்சந்தை என தடுக்கப்பட்டு வரும் இவை இனி சட்டப்பூர்வமாகி விடும். அரிசி, வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை பதுக்கி வைத்து விலையை ஏற்றி விற்பதற்கு தடையில்லை. நுகர்வோரான சாமானிய மக்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். 

தொழிலாளர்கள், விவசாயிகள், நுகர்வோருக்கு எதிரான சட்டங்களை எதிர்த்து இந்தியாவின் மத்திய தொழிற்சங்கங்கள் நவம்பர் 26ஆம் தேதியன்று பொது வேலை நிறுத்தம் செய்ய அறைகூவல் விடுத்துள்ளன.