திருச்சியில் தி.மு.க.. ஜெயிக்கப்போவதில்லையா..? டென்ஷனாகும் கதர் சட்டைகள்

அறந்தாங்கி தொகுதியை மகன் ராமச்சந்திரனுக்கு வாங்கிய திருச்சி காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசர் அங்கேயே முகாமிட்டுள்ளார்.


மகன் எப்படியும் வெற்றிபெற்றுவிட வேண்டும் என்கிற துடிப்பில் அறந்தாங்கி முழுவதும் ஓடியாடி வேலை செய்து வருகிறார். சொந்த கட்சி, கூட்டணி கட்சிகள் தவிர மாஜி கட்சி பிரமுகர்களையும் தனித்தனியாக சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். தந்தை மகனுக்கு ஆற்றும் உதவியாக இதனை எடுத்துக்கொள்ளலாம்.

அதேநேரம் சொந்த தொகுதியை சுத்தமாக மறந்துவிட்டது சரியா? என ஆவேசமாக கேள்வி எழுப்புகிறார்கள் திருச்சி திமுகவினர். திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்குள் வரும் 5 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றில் கூட திருநா இன்னும் கால் பதிக்கவில்லையாம். நேருவே கூப்பிட்டும் ஆள் பிடி கொடுக்கவில்லை.

இது தொடர்பாக திருச்சி திமுகவினரிடம் கேட்டபோது,’’ போன எம்.பி தேர்தலில் நாங்க அவரை தூக்கி சுமந்தோம். பல இடங்களில் நாங்களே கைக்காசை போட்டு செலவழிச்சோம். இதையெல்லாம் மறந்திட்டு இப்ப இந்த பக்கமே எட்டிப் பார்க்க மாட்டேங்கிறாரு. அதுவும் அண்ணன் நேரு கூப்பிட்டும் மனுஷன் டிமிக்கி கொடுத்திட்டு வர்றாரு. ஏட்டிக்குப் போட்டியா அறந்தாங்கி தொகுதியில் உள்ள எங்க ஆட்களை ஆப் பண்ண எவ்வளவு நேரமாகும்?

கூட்டணி தர்மத்திற்காக கட்டுப்பட்டு இருக்கிறோம். நிலைமை இப்படியே நீடிச்சா அதையும் செய்ய வெச்சிடுவாரு போல’’ என பொங்கினார்கள். இது குறித்து திருநா தரப்பில் விசாரித்தபோது,’’ அண்ணன் போனாலும் திருச்சியில் திமுக ஜெயிக்கப் போவதில்லை’’ என பூடகமாக பதில் சொல்கிறார்கள்.

அப்படித்தானா..?