தொகுதிப் பங்கீட்டில் தி.மு.க. இப்படி பிடிவாதம் பிடிப்பது சரிதானா..? கலக்கத்தில் உடன்பிறப்புகள்

திருமாவளவன் தொடங்கி கம்யூனிஸ்ட், காங்கிரஸ் என்று தி.மு.க.வுடன் கூட்டணி சேரும் ஒவ்வொரு கட்சியும் வெளியே சொல்ல முடியாத அளவுக்கு வருத்தத்திற்கு ஆளாகிறார்கள். இது, சரிதானா... தி.மு.க. இப்படி செய்யலாமா என்று தி.மு.க.வினரே வருத்தமாக இருக்கிறார்கள்.


தி.மு.க தரப்பில் காங்கிரஸ் கட்சிக்கு 24 சீட்டுகள் தருவதாகச் சொல்லிவிட்டனர். (ஒரு எம்.பி-க்கு 3 எம்.எல்.ஏ சீட் என்ற கணக்கில்). ப.சிதம்பரம், திருநாவுக்கரசர், கார்த்திக் சிதம்பரம், ஜோதிமணி, தங்கபாலு உள்ளிட்டவர்கள், அதை ஏற்றுக் கொண்டு தேர்தலைச் சந்திப்போம் என்றும் சொல்கின்றனர். 

ஆனால், மாணிக்தாகூரும், கே.எஸ்.அழகிரியும், ராகுல் காந்தியைத் தொடர்ந்து குழப்பி, இழுபறியை நீட்டித்துக் கொண்டிருக்கின்றனர். அதைவிட முக்கியம் இந்த குழப்பத்திற்குப் பின்னால், எம்.பி ஜோதி மணி இருக்கிறார் என்ற தவறான தகவலையும் திட்டமிட்டுப் பரப்பிக் கொண்டிருக்கின்றனர். 

நியாயமாகப் பார்த்தால், விடுதலைச் சிறுத்தைகளுக்கு இன்னும் கூடுதலாகக் கொடுத்திருக்க வேண்டும். அவர்களின் அடிப்படை கட்டமைப்பு, வட தமிழகத்திலும், கொங்கு பெல்டிலும் உண்மையிலேயே முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உறுதியானதாக இறுகி வளர்ந்துள்ளது). 

ஆனால், சிதைந்துபோன பில்டிங்கையும், அடியோடு தகர்ந்து போன பேஸ்மெண்ட்டையும் வைத்துக் கொண்டு, கே.எஸ்.அழகிரி இழுத்துக் கொண்டிருப்பது, அவரது சொந்த நலனைக் கருத்தில் கொண்டே என்பதுவும், இந்த முறையும ராகுல் காந்தி தப்புக் கணக்குப் போடுகிறார் என்பதையும்தான் காட்டுகிறது.  

இது ஒரு பக்கம் இருக்க, தி.மு.க., -காங்கிரஸ் பேச்சு வார்த்தையில், தி.மு.க-தான் வீண் பிடிவாதமும், குளறுபடியும் செய்கிறது என்ற பொய்த் தகவலை, தி.மு.க-விலேயே மற்றொரு பவர் சென்டர், பத்திரிகையாளர்களைத் வலிந்து தொடர்பு கொண்டு பரப்பிக் கொண்டிருக்கிறது. இவ்வளவு குளறுபடிகள் இந்த நேரத்தில் வளரவிட்டால், களத்தில் எப்படி தொண்டர்கள் ஒற்றுமையாக வேலை செய்வார்கள்?

தி.மு.க.வுக்கு சிக்கல் ஆரம்பம் என்றுதான் சொல்ல வேண்டும்.