ஒரு ஓட்டுக்கு ஒரு 2000 ரூபாய் நோட்டு! விநியோகம் செய்த போது சிக்கிய திமுக எம்எல்ஏ? ஆத்திரத்தில் கிராம மக்கள் செய்த செயல்..!

இடைத் தேர்தல் நடைபெறும் நாங்குநேரி தொகுதியில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக வைத்திருந்த 2,000 ரூபாய் நோட்டுகளுடன் திமுக எம்எல்ஏ சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்டோபர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அ.தி.மு.க சார்பில் நாராயணன், காங்கிரஸ் சார்பில் ரூபி மனோகரன் உள்ளிட்ட 23 வேட்பாளர்கள் நாங்குநேரியில் போட்டியிடுகின்றனர். 

வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து ஓட்டு கேட்பதாக அதிமுக, காங்கிரஸ் கட்சிகள் பரஸ்பரம் குற்றம்சாட்டி வந்தன. இதனிடையே சுயேட்சை வேட்பாளர்களும் அதிமுக, காங்கிரஸ் கட்சியினர் பணம் தருவதாக குற்றம்சாட்டினர்.

இந் நிலையில், நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட அம்பலம் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் பெரியகுளம் எம்.எல்.ஏ-வான சரவணகுமார் தலைமையில் தேர்தல் பணிகளை செய்து கொண்டிருந்தனர். அவர்கள் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியானது.

பட்டியல் இனத்தை சேர்ந்தவர்கள் அதிகம் வசிக்கும் அந்த கிராமத்தில் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்திருந்தனர். இந்நிலையில் தேர்தல் புறக்கணிப்பு அறிவித்த கிராமத்தில் பணம் கொடுக்க முயற்சி செய்வதாக புகார் எழுந்துள்ளது. இதை அடுத்து அங்கு திரண்ட பொதுமக்கள் பணம் கொடுக்க வந்தவர்களை சிறைப்பிடித்து அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தார்கள்.

தகவல் அறிந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் வீட்டில் 2,000 நோட்டுகளாக சிதறிக் கிடந்த 2.78 லட்சம் ரூபாயை அதிகாரிகள் கைப்பற்றினார்கள். இது தொடர்பாக தேர்தல் அலுவலர்களும் காவல்துறையினரும் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்தச் சம்பவத்தால் நாங்குநேரி தொகுதியில் பரபரப்பு நிலவுகிறது.