கிராமப்புறங்களில் வீசத் தொடங்கி விட்டது கொரோனா 'அபாய அலை'..! ஸ்டாலின் எச்சரிக்கை குரல்..

நகர்ப்புறங்களில் வீசிய கொரோனா 'அபாய அலை' கிராமப்புறங்களில் வீசத் தொடங்கி விட்டது என்று எச்சரிக்கை குரல் கொடுத்திருக்கிறார் ஸ்டாலின்.


தமிழ்நாடு முழுவதும் நோய்த் தொற்றுக்குள்ளான நேற்றைய எண்ணிக்கை 4343 பேர். அதில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள்- அதாவது 2322 பேர், சென்னை தவிரப் பிற மாவட்டங்களில் இந்த நோய்க்குள்ளாகியிருக்கிறார்கள் என்பது மிகுந்த அதிர்ச்சியும் கவலையுமளிக்கிறது.

நேற்று 57 பேர் இறந்ததில், 35 பேர் வெளிமாவட்டங்களில் உள்ளவர்கள் என்ற அரசின் புள்ளிவிவரம் தமிழ்நாட்டில் “சமூகப் பரவல்” இல்லை என்று அமைச்சரும், முதலமைச்சருமே, மருத்துவ விஞ்ஞானிகள் போல் மாறி மாறி பேட்டியளித்து- 'நோய்த் தடுப்பு முயற்சிக்கான' காலத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதைத்தான் காட்டுகிறது.

'19 பேருக்கு வந்த நோய்த் தொற்றுக்கு யார் காரணம்' என்று கண்டுபிடிக்க முடியாத சூழலிலேயே, கேரளாவில் சமூகப் பரவல் என்று செய்திகள் வருகின்ற நிலையில், அமைச்சர் திரு. விஜயபாஸ்கரும், முதலமைச்சர் திரு. பழனிசாமியும் 'நோய்த் தொற்று நிபுணர்கள் மட்டுமே அடங்கிய' ஒரு குழுவினைக் கூட அமைக்காமல்- இவர்களாகவே “சமூகப் பரவல் இல்லை” என்று 'சான்றிதழ்' அளித்து, மக்களை அபாயத்தில் தள்ளி வருகிறார்கள்.

கிராமப்புறங்கள் அடங்கிய தமிழகத்தின் பிற மாவட்டங்களில், இந்த நோய் மிக மோசமாகப் பரவி வருகின்றது என்பதை அரசின் புள்ளிவிவரங்களே சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கிறது.

 கிராமங்களில் தொடங்கியுள்ள 'கொரோனா அலை' பற்றி எதுவுமே தெரியாதது போல், மாநிலப் பேரிடர் மேலாண்மை ஆணையத் தலைவரான பழனிசாமி இன்னும் இருப்பது கண்டனத்திற்குரியது.  

சென்னையில் கட்டுக்கடங்காமல் போகும் கொரோனா நோய்த் தொற்றைத் தடுக்க முடியாமல் 'பல்வேறு குழுக்களைப் போட்டு' 'அதிகாரிகளுக்குள்ளும் அமைச்சர்களுக்குள்ளும் பனிப்போர் ஏற்படுத்தி' தடுமாறி நிற்பது போன்ற நிலை, தமிழகத்தின் பிற மாவட்டங்களில் உருவானால் மக்களுக்குப் பேராபத்தை ஏற்படுத்திவிடும் விடும் என்பதை முதலமைச்சர் உணர வேண்டும் என்று எச்சரிக்கை செய்துள்ளார்.