கண் இருந்தா கண்ணீர் வரத்தான் செய்யும் என்று தான் அழுத விவகாரத்தை கே.எஸ்.அழகிரி அழகாக மூடி மறைத்தாலும், அவர் மீது பரிதாப உணர்ச்சியுடன் பலரும் தனித்துப் போட்டிக்கு வலியுறுத்தி வருகிறார்கள்.
காங்கிரஸ் நிலைமை பரிதாபமோ பாவம்... கமல் கூட்டணிக்குப் போகலாமே..?
கடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட அதே கூட்டணி திமுக தரப்பில். எதிர் தரப்பிலும் அப்படியே. அந்தத் தேர்தலில் மகத்தான வெற்றியைப் பெற்றது திமுக அணி. அப்படியிருக்க இப்போது ஏன் அச்சம்? அப்போது ராகுல் காந்தியைப் பிரதமராக்க அதிகாரபூர்வமாக கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு 25 கோடி கொடுத்த திமுக இம்முறை ஸ்டாலினை முதல்வராக்க அதை விடப் பலமடங்கு செலவிடும் என்பது உறுதி. அப்படியிருந்தும் ஏன் அச்சம்?
கூட்டணிக் கட்சிக்கு இடங்களைக் குறைப்பதும் கூட்டுவதும் அவர் முடிவு. ஆனால் அவர்களை கண்ணியக் குறைவாக நடத்துவதற்கு ஒரு காரணம்தான் இருக்க முடியும் அது - ஆணவம். தேர்தல் நடந்து ஆட்சிக்கு வரும் முன்னரே இப்படி ஒரு ஆணவம் என்றால் அதிகாரத்தில் அமர்ந்து விட்டால் எப்படியிருக்கும்?
ஒரு சில இடங்களுக்காக அழுது கொண்டும் அவமானங்களைச் சகித்துக் கொண்டும் ஏன் திமுகவுடன் காங்கிரஸ் ஒட்டிக் கொண்டிருக்கிறது? தனித்து நின்றாலோ, வேறு ஒரு அணியைக் கட்டினாலோ, வேறு ஒரு அணியில் பங்கேற்றாலோ, தோற்றுப் போவோம் என்று பயமா? சரி தோற்று போனாலும் கௌரவமும் சுயமரியாதையும் மிஞ்சும்?
இப்போது மட்டும் ஜெயித்து ஆட்சியைப் பிடிக்கப் போகிறதா? பல தியாகங்களைப் புரிந்து இவர்களின் முன்னோர்கள் நாட்டிற்கு சுதந்திரம் வாங்கித் தந்தார்கள் என்று பாடப்புத்தகத்தில் படித்தோமே அதெல்லாம் பொய்யா? அல்லது இவர்கள் அவர்களின் வழித்தோன்றல்கள் இல்லையா? என்று குரல் எழுப்புகிறார்கள். காங்கிரஸ் கட்சிக்கு இனியாவது விழிப்பு வரட்டும்.