கம்ப்யூட்டர்! கண்காணிப்பு! உளவு! ஹேக்! மோடி அரசின் வில்லங்க திட்டம்!

நாட்டில் உள்ள எந்த ஒரு குடிமகனின் கம்ப்யூட்டரையும் விசாரணை அமைப்புகளின் பிரதிநிதிகள் கிட்டத்தட்ட ஹேக் செய்வதற்கான அனுமதியை மத்திய அரசு வழங்கியுள்ளது.


சிபிஐ, அமலாக்கத்துறை, என்ஐஏ உள்ளிட்ட மத்திய விசாரணை அமைப்புகள் எந்த கணினியையும் உளவுபார்க்கவும், பறிமுதல் செய்யவும் அதிகாரம் வழங்கும் புதிய அறிவிக்கையை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன் படி தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 69(1)-ஆவது பிரிவின் கீழ், கணினிகளை கண்காணித்தல், கணினிகளில் சேமிக்கப்பட்டுள்ள தகவல்கள் மற்றும் அவற்றின் மூலம் மேற்கொள்ளப்படும் தகவல் போக்குவரத்தை இடைமறித்தல், படித்தல், பறிமுதல் செய்தல் உள்ளிட்ட அதிகாரங்கள் 10 மத்திய விசாரணை அமைப்புகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

சிபிஐ, அமலாக்கத்துறை, என்ஐஏ, உளவு அமைப்பான ரா, ஐபி ((IB)) எனப்படும் உளவுத்துறை, மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு, மத்திய நேரடி வரிகள் வாரியம், போதைப்பொருள் தடுப்பு பிரிவு, டெல்லி காவல் ஆணையர், காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கான சமிக்ஞை உளவுப் பிரிவு இயக்ககம் ஆகிய 10 விசாரணை அமைப்புகளுக்கு மத்திய அரசு இந்த வரம்பற்ற அதிகாரத்தை வழங்கியுள்ளது.

   இந்தியாவின் இறையாண்மை,  பாதுகாப்பு, பொது ஒழுங்கு மற்றும் அயல்நாடுகளுடனான நட்புறவை பாதுகாப்பது, இவற்றை மீறும் வகையில் குற்றங்கள் இழைக்கப்படுவதுஎன சந்தேகம் எழும் பட்சத்தில் தொடர்புடைய நபர் அல்லது நபர்களின் கம்ப்யூட்டர்களை ஹேக் செய்யும் அதிகாரம் விசாரணை அமைப்புகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இங்கு ஹேக் என்று குறிப்பிடப்படுவதற்கு காரணம், சந்தேகத்திற்கு இடமான கம்ப்யூட்டர்களை ஆய்வு செய்ய அந்த நபரின் அனுமதியை விசாரணை அதிகாரிகள் பெறத் தேவையில்லை.

   சந்தேகத்திற்கு இடமான நபரின் கம்ப்யூட்டர் ஐ.பி அட்ரசை தெரிந்து கொண்டு, ரிமோட் மூலம் அதற்குள் ஊடுறுவி உள்ளே உள்ள தகவல்களை அப்படியே விசாரணை அமைப்புகள் உறுவி எடுக்க மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது. மேலும் ஒரு கம்ப்யூட்டரில் இருந்து மற்றொரு கம்ப்யூட்டருக்கு தகவல்கள் அனுப்பப்படும் போது அதனை இடைமறித்து பெறுவதற்கான அதிகாரமும் விசாரணை அமைப்புகளுக்கு தற்போது கிடைத்துள்ளது. மேலும் எந்த விசாரணையும் இன்றி சந்தேகத்திற்கு இடமான நபரின் கம்ப்யூட்டரை வீடு புகுந்து விசாரணை அதிகாரிகள் தூக்கிச் செல்லவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

   இது போன்ற செயல்களில் ஏற்கனவே விசாரணை அமைப்புகள் ஈடுபட்டு வருவதாக ஒரு குற்றச்சாட்டு உண்டு. தற்போதைய மத்திய அரசின் அறிவிக்கை மூலமாக சட்டவிரோதமாக விசாரணை அமைப்புகள் மேற்கொண்டு வந்த ஹேக்கிங் செயல்முறைக்கு தற்போது சட்ட அங்கீகாரம் கிடைத்துள்ளது. தகவல் தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வரும் காலத்தில், அது தொடர்பான குற்றங்களும் வேகமாக வளர்ந்து வருகின்றன.

   தகவல் தொழில்நுட்ப குற்றங்களை தடுக்க மத்திய அரசு இப்படி ஒரு அறிவிக்கையை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் பொத்தாம் பொதுவாக யாருடைய கம்ப்யூட்டர்களை வேண்டுமானாலும் விசாரணை அமைப்புகள் துலாவலாம் என்பது போன்ற ஒரு புரிதல் தான் இந்த அறிவிக்கையின் சாராம்சமாக உள்ளது. எனவே சாதாரண குடிமகன் தொடங்கி, அரசியல் எதிரிகள் வரை பலரது கம்ப்யூட்டர்கள் விசாரணை அமைப்புகளின் கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டால் என்ன ஆகும் என்பதே பலரது கேள்வி.

   நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் சமயத்தில் உளவுத்துறைக்கு வரம்பற்ற அதிகாரத்தை மோடி அரசு கொடுத்துள்ளது தான் பலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. எதிர்கட்சிகளின் தேர்தல் வியூகத்தை அறிந்து கொள்ள இந்த புதிய அறிவிப்பு தவறாக பயன்படுத்தப்படலாம் என்று அஞ்சப்படுகிறது. ஆனால் இந்த அறிவிக்கையை வெளியிட்டதே மத்தியில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்ற போது தான் என்றும், அதனை தாங்கள் புதுப்பித்து மட்டுமே வெளியிட்டுள்ளதாக பா.ஜ.க அரசு விளக்கம் அளித்துள்ளது.