மீண்டும் வருகிறதா முழு லாக் டவுன்…?உஷார் தமிழா…

இன்னமும் போகவே இல்லை, அதற்குள் மீண்டும் கொரோனா 2.0 வந்துவிட்டதாக உலக நாடுகள் மட்டுமின்றி உள்ளூரும் அலறிக்கொண்டு இருக்கிறது.


கடந்த 2019 நவம்பரில் சீனாவில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டபோது, ‘அதெல்லாம் இங்கே வராதுப்பா...’ என்று பேசியவர்கள் ஏராளம். அந்த காலக்கட்டங்களில் சீனாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டவர்கள், இந்தியாவில் இருந்து சீனாவுக்கு படிப்பு, வேலை விஷயமாக சென்று தாயகம் திரும்பியவர்களால் அங்கொன்றும், இங்கொன்றுமாக பரவிய கொரோனா தொற்று படிப்படியாக தனது ஆக்டோபஸ் கரங்களை விஸ்தரித்தது. உலகம் முழுவதும் கொரோனாவால் சுமார் 8 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 17 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

 கொரோனா பரவல் ஊரடங்கால் இந்தியாவுக்கு பல லட்சம் கோடி பொருளாதார ரீதியாக பாதிப்பு ஏற்பட்டது. கோடிக்கணக்கானோர் வேலையிழந்தனர். தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் 90 சதவீத அளவுக்கு இயல்பு நிலை திரும்பினாலும், ஊரடங்கால் தொழில், வாழ்வாதார ரீதியாக பாதிக்கப்பட்டோர் ஏராளமானோர் இருக்கத்தான் செய்கின்றனர்

தற்போது புதிய வகை கொரோனா புறப்பட்டுள்ளதால் உலக நாடுகள் அச்சத்தில் உள்ளன. இந்தியா வந்துள்ள பயணிகளின் பட்டியலை மத்திய சுகாதாரத்துறை கணக்கெடுத்து, அவர்களை தனிமைப்படுத்தி கண்காணிக்கும் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் இருந்து சென்னை, மதுரை மற்றும் பிற மாநிலங்களில் பல முக்கிய நகரங்களுக்கு 100க்கும் மேற்பட்டோர் வந்துள்ளனர். அவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கும் முயற்சியில் மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றன. 

 தமிழகத்தை பொறுத்தவரை கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்கள், பொங்கல் பண்டிகை, ஜல்லிக்கட்டு என அடுத்த 3 வாரங்களுக்கு மக்கள் அதிகளவில் கூடும் வாய்ப்புகள் உள்ளன. எனவே, அரசு விழிப்புணர்வு நடவடிக்கைகளில் தீவிரம் காட்ட வேண்டும். வெளிநாடுகளில் இருந்து சமீபத்தில் தமிழகம் வந்தவர்களை விரைவாக கண்டறிந்து, தனிமைப்படுத்தும் முயற்சியில் இறங்க வேண்டும். 

இல்லையென்றால் மீண்டும் முழு லாக் டவுன் போடுவதை தடுக்கவே முடியாது என்கிறார்கள். கொடுமை அடுத்த ஆண்டும் தொடர்வதுதான் வேதனை.