நிறம் மாறும் பிள்ளையாரை தரிசனம் செய்துவிட்டீர்களா..? சுசீந்திரத்தில் ஆறு மாத அதிசயம்

சுசீந்திரத்தில் உள்ள நீலகண்ட விநாயகர் சிலை ஒரே கல்லால் மிக பிரம்மாண்டமான உருவாக்கப்பட்டதாகும்.


இந்த கோயிலில் ஒரு பெண் விநாயகர் சிலையும் உள்ளது. இதை இன்றும் பக்தர்கள் விநாயகி என்று அழைக்கின்றனர்.

நாகர்கோவில் வடிவீஸ்வரத்தில் அழகம்மன் கோவிலில் ஒரு வீணை வாசிக்கும் புலி கால்களை உடைய பெண் விநாயகர் சிலை உள்ளது. இது ஆயிரம் ஆண்டு பழமையானது. எந்தக் காரியத்தைத் தொடங்கினாலும் தொழுத பின்னரே தொடங்கும் பெருமை உடைய விநாயகர் கன்னியாகுமரி மாவட்டத்தில் மற்றொரு அதிசயத்தையும் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்.

நாகர்கோவிலில் இருந்து 16 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது தக்கலை. தக்கலை அருகே அமைந்துள்ள கேரளபுரத்தில் ஒரு மகாதேவர் கோயிலில் தென்கிழக்கு மூலையில் ஒரு உயர்ந்த அரசமரத்தடியே விமானமின்றி, கோபுரமின்றி, சதாகாலமும் வெயிலிலும் மழையிலும் நனைந்து கொண்டு அருள் பாலித்துக் கொண்டிருக்கிறார் இந்த அதிசயப் பிள்ளையார்.

ஓர் ஆண்டில் முதல் ஆறு மாதம் வெள்ளையாகவும் அடுத்த ஆறுமாதம் கறுப்பாகவும் இந்த அதிசயப் பிள்ளையார் காட்சி தருகிறார். ஆடி அமாவாசை முதல் தை அமாவாசை வரையுள்ள ஆறு மாத காலத்தைத் தட்சயாணம் என்றும் தை அமாவாசை முதல் ஆடி அமாவாசை வரையிலான ஆறு மாத காலத்தை உத்தராயணம் என்றும் கூறுவர். இந்த இரண்டு காலத்தில் தான் விநாயகரின் நிறமாற்ற அதிசயம் நிகழ்கிறது. விநாயகரின் நிறத்தைப் பொறுத்து இந்த பிள்ளையார் அமர்ந்துள்ள அரசமரமும் நிறம் மாறுகிறதாம்.

இப்படி அதிசயம் தந்து அசத்தும் விநாயகர் சிலை சந்திரகாந்தக் கல்லில் வடிவமைக்கப்பட்டதாகும். இதை வணங்கும் திருமணமாகாத கன்னிப் பெண்களுக்கு விரைவில் மங்கலம் பொங்கும் என்றும் திருமணமாகி குழந்தை வரம் இல்லாத பெண்களுக்குப் பிள்ளை பாக்கியம் கிடைக்கும் என்றும் நம்பிக்கை வைத்துள்ளார்கள்.

இந்த விநாயகரைத் துதிப்பதற்குப் பல ஊர்களிலிருந்தும் பக்தர்கள் வருகிறார்கள். முதல் முறை வந்து வெள்ளையாக பார்த்த சிலையை அடுத்த ஆறு மாதம் கழித்து கருப்பாய் மாறிய அதிசயத்தை காணத் திரும்பவும் கேரளபுரம் வருகின்றனர்.