பல கிலோ மீட்டர் நடந்து நடந்து சோர்ந்த குழந்தை..! அப்படியே சூட்கேஸில் சாய்ந்து..! நெஞ்சை உலுக்கிய சம்பவத்தின் அதிர்ச்சி புகைப்படம்!

புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பஞ்சாபிலிருந்து ஜான்சிக்கு செல்லும் பொழுது நடக்க முடியாமல் சோர்ந்து போன குழந்தை தனது அம்மா இழுத்துக் கொண்டு சென்ற சூட்கேஸ் ட்ராலி மீது படுத்துக் கொண்டு செல்லும் காட்சி காண்போரின் கண்களை கலங்க வைத்துள்ளது.


தற்போது நிலவிவரும் ஊரடங்கு உத்தரவால் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களின் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். பொது போக்குவரத்து வசதி முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் அவர்கள் தங்களது சொந்த ஊருக்கு வேறு வழியின்றி நடந்தே தங்களது குழந்தைகளையும் உடைமைகளையும் சுமந்து செல்கின்றனர். அந்த வகையில் பஞ்சாபிலிருந்து புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் ஆக்ரா வழியாக ஜான்சிக்கு கூட்டம் கூட்டமாக நடந்து செல்கிறார்கள். 

அவ்வாறு செல்லும்போது ஒரு தாய் தனது குழந்தையை தோளில் சுமந்து கையில் ட்ராலி சூட்கேசை இழுத்து சென்று கொண்டிருக்கிறார். பின்னர் நீண்ட தூரம் தூக்கி செல்ல முடியாததால் குழந்தையை நடக்க வைத்தே கூட்டி சென்றார். அந்தக் குழந்தையும் நீண்ட நேரமாக பல கிலோமீட்டர் நடந்து சோர்வானதால் தூக்கம் வந்து அவரது அம்மா இழுத்துச்செல்லும் ட்ராலி சூட்கேஸின் மீது படுத்துக் கொண்டது. அவரது அம்மாவும் வேறுவழியின்றி குழந்தை ட்ராலி சூட்கேஸின் மீது தூங்குவதைப் பார்த்து ட்ராலியை கவனமாக இழுத்து செல்கிறார். இந்த காட்சி காண்போரின் மனதை கரைய வைத்துள்ளது.

ட்ராலி சூட்கேசின் மீது தூங்கும் குழந்தையையும் சேர்த்து சூட்கேசை இழுத்து செல்லும் தாயின் வீடியோ சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ காண்போரின் கண்களை கலங்க வைக்கும் வகையில் உள்ளது.