நாமக்கல்லில் தமிழக முதல்வர் கொரோனா ஆய்வு.. 19 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்..!

கொரோனா தடுப்பு உள்ளிட்ட அரசு துறை பணிகளை, தமிழ்நாடு முதலமைச்சர் . எடப்பாடி கே. பழனிசாமி பல்வேறு நகரங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.


அந்த வகையில் இன்று நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வு செய்தார். அந்த நிகழ்ச்சியில் 243 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப் பணிகளையும், புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல்லும் நாட்டினார். 

இதையடுத்து 19,132 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் வழங்கி சிறப்பித்தார். அவருடன், மாநில மின்சாரம், மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி. தங்கமணி மற்றும் சமூகநலம், சத்துணவுத் திட்டத்துறை அமைச்சர் மருத்துவர். வெ. சரோஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதையடுத்து பேசிய முதல்வர், ’கொரோனாவை தடுப்பதில் முன்னணி மாவட்டமாக நாமக்கல் திகழ்கிறது. நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் கட்டுக்குள் உள்ளது. மக்களின் ஒத்துழைப்பு இருந்தால்தான் கொரோனாவை தடுக்க முடியும். மக்கள் ஒவ்வொரு முறையும் வெளியே செல்லும்போதும் முக கவசம் அணிந்து செல்ல வேண்டும். வீடுகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும’ என்று கேட்டுக்கொண்டார்.

மேலும், ‘நாமக்கல் அனைத்து வகையிலும் சிறந்து விளங்கும் மாவட்டம் என்றால் மிகையில்லை. கல்வியில் சிறந்து விளங்கும் மாவட்டமாக நாமக்கல் திகழ்கிறது. முட்டை, ஜவ்வரிசி உற்பத்தியில் முன்னோடியாக இருக்கும் மாவட்டம். நாமக்கல் லாரி தொழிலுக்கு பெயர் பெற்ற மாவட்டம் ஆகும். நாமக்கல் மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவித்தார்.