நிவர் புயல் தமிழகத்தை பெரும் அச்சத்தில் ஆழ்த்திவருகிறது. கடந்த இரண்டு நாட்களாக தொடர் கனமழை பெய்துவருவதால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளது. கொட்டும் மழையில் நேரில் ஆய்வு செய்து தண்ணீர் திறந்துவைத்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
கொட்டும் மழையிலும் சளைக்காமல் ஆய்வுப் பணி செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
சென்னையிலிருந்து 300 கிலோமீட்டர், கடலூர் மாவட்டத்திலிருந்து 240 கி.மீ. தூரத்திலும் மையம் கொண்டிருக்கிறது. இப்புயல் மணிக்கு 11 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது. இன்றைக்கு நள்ளிரவு 1 மணியளவில் புதுச்சேரி அருகில் கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கின்றது.
தமிழ்நாடு அரசால் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு, தாழ்வான பகுதிகளில் வசிக்கன்ற மக்களை அரசால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் முகாம்களில் தங்க வைத்துக்கொண்டிருக்கிறோம். சென்னை மாநகரத்தில் 200 வார்டுகள் இருக்கின்றன. அந்த 200 வார்டுகளிலும் முகாம்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இதுவரை 400 நபர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்மட்டத்தின் உயரம் 24 அடி. தற்போது 21.5 அடி உயரம் நீர் நிரம்பியிருக்கின்றது. ஏரிக்கு 4000 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருக்கின்றது. அணையிலிருந்து இன்று 12 மணியளவில் 1000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டிருக்கின்றது. ஏரிக்கு வருகின்ற நீரை படிப்படியாக திறப்பதற்கு பொதுப்பணித் துறையால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதோடு, ஆதனூர் ஏரியிலிருந்து 2000 கன அடி நீர் அடையாற்றின் வழியாக வெளியேறிக் கொண்டிருக்கின்றது. செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து இன்னும் இரண்டு, மூன்று மணி நேரத்திற்குள் அங்கு வருகின்ற நீர் முழுவதும் திறக்கப்படும். சுமார் 6,000 கன அடி நீர் அடையாற்றின் வழியாக செல்கிறது.
அடையாற்றில் சுமார் 60,000 கன அடி தண்ணீர் செல்லக்கூடிய அளவிற்கு ஆற்றின் அகலம் இருக்கின்றது. அதனால் பொதுமக்கள் அச்சப்பட வேண்டியதில்லை. அரசால் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறார்.