குழந்தை திருமணத்துக்கு முற்றுப்புள்ளி, பாலியல் வன்முறையைத் தடுக்கும் வழிகாட்டி… 23 வழிகாட்டி புத்தகங்களை வெளியிட்ட முதல்வர் எடப்பாடி.

குழந்தைத் திருமணங்கள் அதிகமாக நடைபெறும் மாவட்டங்களான திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, கோயம்புத்தூர், பெரம்பலூர், சேலம், விருதுநகர் மற்றும் தேனி ஆகிய 7 மாவட்டங்களில் குழந்தைத் திருமணத் தடைச் சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதில் ஈடுபட்டு வரும் சமூக நலத்துறை, சமூக பாதுகாப்புத் துறை (குழந்தை நலக்குழு, மாவட்ட குழந்தைப் பாதுகாப்பு அலகு, இளஞ்சிறார் நீதிக் குழுமம்), காவல் துறை, பள்ளிக் கல்வித் துறை ஆசிரியர்கள், பஞ்சாயத்து துறை மற்றும் முன்னணிக் களப்பணியாளர்கள் போன்றவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக கையேடுகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டார்.


வளரிளம் பருவத்தினரின் தன்னுரிமை மேம்பாடு மற்றும் குழந்தைத் திருமண கொடுமையை முடிவுக்குக் கொண்டு வருதல் திட்டத்தின் ஒரு பகுதியாக, யுனிசெஃப் அமைப்பின் நிதியுதவியுடன், பள்ளிசாரா மற்றும் வயதுவந்தோர் கல்வி இயக்ககத்தின் மாநிலக் கருவூல மையம் சார்பில் தயாரிக்கப்பட்ட 23 புத்தகங்கள் அடங்கிய இளந்தென்றல் தகவல் தொடர்புக் கையேட்டை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.    

குழந்தைத் திருமணம், வளரிளம் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் மற்றும் அவற்றை எதிர்கொள்ளுதல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த பள்ளிசாரா மற்றும் வயதுவந்தோர் கல்வி இயக்ககத்தின் மாநிலக் கருவூல மையம் சார்பில் தயாரிக்கப்பட்ட 23 புத்தகங்கள் அடங்கிய இளந்தென்றல் தகவல் தொடர்புக் கையேடுகள் ஆகும். 

இதில், இளந்தென்றல் பெட்டகம் - ஓர் அறிமுகம், வளரிளம் பருவ ஆண்கள் மற்றும் பெண்களின் தன்னுரிமை மேம்பாடு – வாழ்க்கைத்திறன் பயிற்சிக் கையேடு, பாலினம் சார்ந்த வன்முறை – வளரிளம் பருவத்தினருடன் பேசுவோம், குழந்தைத் திருமணம் - ஏன்? எதற்கு? எப்படி?, வளரிளம் பருவ ஆண்களுக்கான திறன் வளர்ப்புப் பயிற்சிக் கையேடு, வளரிளம் பருவ பெண்களுக்கான திறன் வளர்ப்புப் பயிற்சிக் கையேடு, வளரிளம் பருவ ஆண் மற்றும் பெண்களுக்கான திறன் வளர்ப்புப் பயிற்சிக் கையேடு, முன்னணிக் களப்பணியாளர்களுக்கான திறன் வளர்ப்புப் பயிற்சிக் கையேடு,

குழந்தைகள் மற்றும் வளரிளம் பெண்களுக்கான சட்டங்கள் மற்றும் திட்டங்கள், களத்தில் சவால்களை எதிர்கொள்வதற்கான உத்திகள், காவல் துறையினர் - நிர்ணயிக்கப்பட்ட செயல்பாட்டு வழிமுறைகள், பள்ளி ஆசிரியர்கள் - நிர்ணயிக்கப்பட்ட செயல்பாட்டு வழிமுறைகள், முன்னணிக் களப்பணியாளர்கள் - நிர்ணயிக்கப்பட்ட செயல்பாட்டு வழிமுறைகள், மாவட்ட குழந்தைத் திருமண தடுப்பு அலுவலர் - நிர்ணயிக்கப்பட்ட செயல்பாட்டு வழிமுறைகள், மாவட்ட குழந்தைப் பாதுகாப்பு அலுவலர் - நிர்ணயிக்கப்பட்ட செயல்பாட்டு வழிமுறைகள், பஞ்சாயத்து தலைவர்கள், உறுப்பினர்கள் - நிர்ணயிக்கப்பட்ட செயல்பாட்டு வழிமுறைகள், பாலினம் சார்ந்த வன்முறை மற்றும் குழந்தைத் திருமணம் பற்றி காவல்துறையினருக்கான பயிற்சிக் கையேடு,

பாலினம் சார்ந்த வன்முறை மற்றும் குழந்தைத் திருமணம் பற்றி ஆசிரியர்களுக்கான பயிற்சிக் கையேடு, பாலினம் சார்ந்த வன்முறை மற்றும் குழந்தைத் திருமணம் பற்றி முன்னணிக் களப்பணியாளர்களுக்கான பயிற்சிக் கையேடு, பாலினம் சார்ந்த வன்முறை மற்றும் குழந்தைத் திருமணம் பற்றி மாவட்ட குழந்தை திருமண தடுப்பு அலுவலர்களுக்கான பயிற்சிக் கையேடு, பாலினம் சார்ந்த வன்முறை மற்றும் குழந்தைத் திருமணம் பற்றி மாவட்ட குழந்தைப் பாதுகாப்பு அலுவலர்களுக்கான பயிற்சிக் கையேடு, பாலினம் சார்ந்த வன்முறை மற்றும் குழந்தைத் திருமணம் பற்றி பஞ்சாயத்து உறுப்பினர்களுக்கான பயிற்சிக் கையேடு, பாதுகாப்பான குழந்தைப் பருவத் திட்டம் - பஞ்சாயத்து உறுப்பினர்களுக்கான வழிகாட்டி ஆகிய புத்தகங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று வெளியிட்டார்கள்.