ஆகாயமே சிவபெருமான் என்பதை சொல்லும் திருத்தலம்..! சிதம்பர ரகசியம் மட்டுமின்றி அதிசயமும் காணலாம்!

நிலம், நீர், தீ, வளி, வான் ஆகிய பஞ்ச பூதங்களான ஐந்து இயற்கை அம்சங்களில், ஆகாயத்தை தனது அம்சமாக கொண்டு பக்தர்களுக்கு அருள் புரிபவர் தான் சிதம்பரத்தில் “நடராஜராக” இருக்கும் சிவபெருமான்.


ஒருமுறை பிரம்மா தேவலோகத்தில் யாகம் ஒன்றை நடத்தினார். அதற்காக, தில்லைவாழ் அந்தணர்கள் மூவாயிரம் பேரையும் சத்தியலோகத்துக்கு அழைத்தார். தில்லையிலேயே இருந்து, நடராஜரின் திருநடனத்தைக் காண்பதை விடவும் அந்த யாகத்தில் எங்களுக்கு என்ன பலன் கிடைத்து விடப்போகிறது என அவர்கள் கூறினார்கள்.

அப்போது, ஒலித்த நடராஜரின் அசரீரியானது யாகத்திற்கு செல்லும்படியும், யாகத்தின் முடிவில் அங்கே தோன்றுவதாகவும் கூறியது. அவ்வாறு தோன்றிய கோலம் ‘ரத்னசபாபதி’ என்று சொல்லப்படுகிறது. அந்த சிலை நடராஜர் சிலைக்கு கீழே அமைக்கப்பட்டுள்ளது. தினமும், காலையில் 10-11 மணிக்குள் அந்த சிலைக்கு பூஜைகள் செய்யப்படும். குறிப்பாக, சிலைக்கு முன்புறமும், பின்புறமுமாக இந்த தீபாராதனை செய்யப்படுகிறது. 

நடராஜரின் தாண்டவம் ‘காஸ்மிக் டான்ஸ்’ என்று வெளிநாட்டு அறிஞர்களால் ஒப்புமைப்படுத்தப்படுகிறது. பூமிப்பந்தின் மையப்புள்ளி அமைந்துள்ள இடத்தில் சிதம்பரம் நடராஜர் கோவில் இருப்பதோடு, காந்த சக்தியின் மையப்புள்ளியானது நடராஜரின் கால் பெருவிரலில் இருப்பதாகவும் சர்வதேச ஆன்மிக ஆராய்ச்சியாளர்கள் பலரும் குறிப்பிட்டுள்ளார்கள்.  

நடராஜரின் பஞ்ச சபைகளில் சிற்றம்பலமாக உள்ள இந்த தலத்தில், நடராஜர் சன்னிதி எதிரில் உள்ள மண்டபத்தில் நின்றபடி பிரம்மா, விஷ்ணு, சிவன் என மூவரையும் ஒரு சேர தரிசிக்கலாம். நடராஜர் சன்னிதி அருகில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான கோவிந்தராஜப் பெருமாள் தலம் அமைந்திருப்பதை பலரும் அதிசயமும், ஆச்சரியமும் கலந்த பக்தியோடு தரிசித்து மகிழ்கின்றனர்.

சிவனுக்கும், சக்திக்கும் நடந்த போட்டி நடனத்தில் ஆடிய தில்லை காளியின் கோவில், நடராஜர் கோவில் அருகில் உள்ளது. கிட்டத்தட்ட 51 ஏக்கர் பரப்பளவில் அமைந்த பிரம்மாண்டமான சிவத்தலம் இதுவாகும். சிறந்த கட்டிடக் கலைக்கு எடுத்துக்காட்டாக அமைந்த அற்புத தலமாகவும் உலகப்புகழ் பெற்றது. 

இங்கு மூலவர் திருமூலநாதர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். ஆனால், நடராஜரே இங்கு பிரதான மூர்த்தி ஆவார். இங்குள்ள ஈசனை வழிபடுவோருக்கு மனநிம்மதி கிடைப்பதோடு, உடல் சம்பந்தப்பட்ட நோய்கள் தீருவதாகவும் ஐதீகம். குறிப்பாக, கலைகளில் தேர்ச்சி பெற விரும்புவோர் இத்தல நடராஜரை பக்தியுடன் பிரார்த்தனை செய்தால் அவரவர்கள் விரும்பிய வண்ணம் சிறப்பான எதிர்காலம் அமையும் என்பது நம்பிக்கை.

மேலும், குழந்தை பாக்கியம் மற்றும் குடும்ப வளம் ஆகிய காரணங்களை முன்னிட்டும் பக்தர்கள் பிரார்த்தனை செய்து கொள்வது வழக்கமாகும். இறைவன் இத்தலத்தில், நடராஜர் என்ற உருவமாகவும், ஆகாயம் என்ற அருவமாகவும், ஸ்படிக லிங்கம் என்ற அருவுருமாகவும் அருள்பாலிக்கிறார். சித்சபையில் சபாநாயகரின் வலப்பக்கத்தில் உள்ள ஒரு சிறு வாயில் திரை அகற்றுப்பெற்று, ஆரத்தியும் காட்டப்படும். அதற்குள் உருவம் ஏதும் இருக்காது.

தங்கத்தால் செய்யப்பட்ட வில்வ தளமாலை ஒன்று தொங்கவிடப்பட்டுக் காட்சியளிக்கும். அதாவது, உருவம் ஏதும் இல்லாமல் வில்வதளம் தொங்குவதன் ரகசியம் இறைவன் இங்கு ஆகாய உருவில் இருக்கிறார் என்பதாகும். ஆகாயத்துக்கு ஆரம்பமும், முடிவும் கிடையாது. அவனை உணர மட்டுமே முடியும் என்பதே அதன் அர்த்தம்.

சிதம்பர ரகசிய ஸ்தானத்தில் அம்மனுக்குரிய ஸ்ரீசக்கரத்தையும், சிவனுக்குரிய சிவசக்ரத்தையும் இணைத்து, ஒன்றாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதாகவும் ஒரு தகவல் உண்டு. இந்த சக்ரத்தில் நடராஜப்பெருமான் ஐக்கியமாகி, தன் ஆனந்த நடனத்தினால் உலகை படைத்து, காத்து, மறைத்து, அழித்து, அருளிக் கொண்டிருப்பதாகவும் ஐதீகம்.