ஆன்லைன் பேமென்ட் என்றால் 2 பாட்டில்..! கேஸ் கொடுத்தால் ஒன்னு தான்..! மது விற்பனைக்கு புதிய நிபந்தனைகள்!

ஆன்லைன் மூலம் பணம் செலுத்தி ரசீதுடன் டாஸ்மாக் கடைக்கு சென்றால் இரண்டு பாட்டில்கள் வாங்கலாம் என்றால் பணம் கொடுத்தால் ஒரு பாட்டில் தான் விற்பனை செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


தமிழகத்தில் கொரோனா பரவி வருவதால் டாஸ்மாக் கடைகளை திறக்க தடை கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் இந்த மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் டாஸ்மாக்கை திறக்க அனுமதி அளித்தது. அதே சமயம் டாஸ்மாக்கில் விற்பனையின் போது கடைபிடிக்க சில நிபந்தனைகளை விதித்துள்ளது.

அதன்படி,ஆன் லைனில் பணம் செலுத்தி அது தொடர்பாக விவரங்களை டாஸ்மாக்கில் கொடுத்தால், 750 மிலி கொண்ட 2 பாட்டில் பெற்று கொள்ளலாம். நேரடியாக டாஸ்மாக் கடைகளுக்கு சென்று பணம் செலுத்தினால் 750 மிலி கொண்ட மது பாட்டில் ஒன்று மட்டுமே வழங்க வேண்டும்.  

மதுவிற்பனைக்கு டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை மட்டுமே மேற்கொள்ள முயற்சிக்க வேண்டும். டிஜிட்டல் முறையில் பில் வழங்க வேண்டும் அதில் வாங்கியவரின் பெயர் ஆதார் எண் கண்டிப்பாக இடம்பெற்றிருக்க வேண்டும். முதல் மதுபாட்டில் பெற்றதில் இருந்து 3 நாட்கள் கழித்து தான்  அந்த நபருக்கு மது விற்பனை செய்ய வேண்டும்.

பார்கள் செயல்படவே கூடாது. டாஸ்மாக் கடைகள் அருகே குடிக்க யாரையும் அனுமதிக்க கூடாது. இந்த உத்தரவுகளை பின்பற்றுவதில் குழறுபடி நடந்தாலோ, சமூக இடைவெளி கடைபிடிக்கப்படவில்லை என்றாலோ டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட உயர்நீதிமன்றம் உத்தரவிடும். எந்த சூழலிலும் யாருக்கும் மொத்தமாக மதுபாட்டில்களை விற்க கூடாது.