பெட்ரோல் மீது லிட்டருக்கு ரூ.10..! டீசல் மீது லிட்டருக்கு ரூ.13..! இரவோடு இரவாக வரியை உயர்த்திய மோடி அரசு!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள நிலையில் இந்தியாவில் அதன் பலனை மக்களுக்கு அளிக்காத வகையில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு அதிரடியாக உயர்த்தியுள்ளது.


சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 20 டாலர்கள் என்கிற குறைந்த அளவில் உள்ளது. இதனால் இந்தியாவில் பொதுத்துறை நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதற்கான அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என்று கருதப்பட்டது.

ஆனால் நேற்று நள்ளிரவு மத்திய அரசு திடீரென பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை உயர்த்தியுள்ளது. அதன்படி ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு கலால் வரி கூடுதலாக 5 ரூபாயும், சாலை செஸ் வரி 5 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது. இதே போல் டீசல் மீதான கலால் வரி 5 ரூபாய் கூடுதலாகவும், சாலை செஸ் வரி 8 ரூபாயும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் பெட்ரோல் மீதான வரி 32 ரூபாய் 98 காசுகளாக உயர்ந்துள்ளது. இதே போல் டீசல் மீதான மத்திய அரசின் வரி31 ரூபாய் 83 காசுகளாக உயர்ந்துள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையில் பெட்ரோல் டீசல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் குறைத்தாலும் சாமான்ய மக்களுக்கு அதற்கான பலன் கிடைக்காது.