உயிரை துச்சமென நினைத்து மருத்துவ சேவை! 2வது முறை கொரோனா தாக்கி பலியான சென்னை நர்ஸ்! நெகிழ்ச்சி சம்பவம்!

சென்னையில் முதல் முறை கொரோனா தாக்குதலுக்கு ஆளாகி சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நர்ஸ் மீண்டும் கொரோனா தாக்கி உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கடந்த மார்ச் மாதம் முதல் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு வந்தவர்களுக்கு சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சையளித்த செவிலிய கண்காணிப்பாளர் தங்கலட்சுமி. 54 வயதான தங்கலக்ஷ்மி சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் பணி செய்து வந்தவர். 

1998 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 22 ஆண்டு கால செவிலியர் பணியாற்றியவர். இவருக்கு சென்னையில் கொரோனா பரவத் தொடங்கிய மார்ச் மாதத்திலேயே தொற்று ஏற்பட்டு 14 நாள் தனிமைப்படுத்தல் மற்றும் சிகிச்சைக்குப் பின் மீண்டும் பணிக்கு திரும்பியவர். கொரோனா தாக்கத்தால் வீட்டில் முடங்காமல் குணமான பிறகு மீண்டும் கொரோனாவுக்கு எதிரான பணியில் ஈடுபட்டார்.

இந்நிலையில் இவருக்கு மீண்டும் தொற்று உறுதியாகி ராஜிவ் காந்தி மருத்துவமனையிலேயே சிகிச்சையில் இருந்தார். இன்று காலை உடல்நிலை மிகவும் கவலைக்கிடமானதையடுத்து செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டது. பலனளிக்காமல் உயிரிழந்தார். முதல் முறை கொரோனா தாக்கியும் 2வது முறையும் எவ்வித தயக்கமும் இன்றி பணிக்கு வந்து உயிரிழந்த தங்கலட்சுமி அனைவராலும் போற்றப்பட்டு வருகிறார்.