உங்கள் கனவில் குதிரை வருகிறதா..? அது சாஸ்தாவின் தரிசனம்

பரந்து விரிந்து உலகின் எட்டுத் திசைகளிலும் திசைக்கு ஒருவராக எட்டு சாஸ்தாக்கள் காவல் காப்பதாகக் கூறுகிறார்கள்


அரூப சாஸ்தா, பாலசாஸ்தா, ருத்ர சாஸ்தா, தர்ம சாஸ்தா, ஆகாச சாஸ்தா, சபரிமலை சாஸ்தா, எரிமேலி சாஸ்தா மற்றும் ஆலப்புழா சாஸ்தா ஆகிய இந்த எட்டு சாஸ்தாக்களில் அரூப சாஸ்தாதான் முதன்மை சாஸ்தா என்ரு கூறப்படுகிறது. இந்த சாஸ்தா சிதம்பரத்திற்கு மேற்கே உள்ள பிரம்மராயர் சுவாமி கோயிலில் அருள்பாலிக்கிறார். தில்லை நடராஜர் ஆலயத்தைவிடப் பழமையான கோயில் இது.

சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் இந்த ஆலயக் கருவறைக்குள் அவயாந்த சுவாமிகள் என்பவர் தவம் புரிந்து வந்தார். அங்கேயே ஜீவசமாதி ஆகிவிட்டார். இவர் சமாதிக்கு மேல் அவரது திருவுருவமும் உள்ளது. இன்றும் அரூப சாஸ்தாவான பிரம்மராயர் சுவாமிக்கு பூஜைகள் செய்யும் பொழுது அவயாந்த சுவாமிகளுக்கும் பூஜைகள் நடை பெற்று வருகின்றன. திங்கட் கிழமைகளில் மட்டும் தான் இங்கு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். அன்று தான் விசேஷ பூஜைகள் நடைபெறுகிறது. மற்ற நாட்களில் மாலை 8 மணி காலை 6 மணிக்கு பூஜைகள் நடத்தி விட்டு அர்ச்சகர் உடனே ஆலயத்தைப் பூட்டி விடுவார்.

கருவறையின் முன் பிரம்மராயர் சுவாமியின் வாகனமான யானையும், பலி பீடமும் உள்ளது. பிரம்மராயர் சுவாமியின் தளபதியாக இரண்டு குதிரைகளுடன் வீரனார் அருள்பாலிக்கிறார். இந்த குதிரைகளின் காலில் சீட்டுக்கட்டும் பிரார்த்தனை மிகவும் விசேஷம். வீடு அல்லது வர்த்தக நிறுவனத்தில் பொருட்கள் திருடு போனால் அது திரும்ப கிடைக்க ஒரு வெள்ளை பேப்பரில் கோரிக்கையாக எழுதியும், நமக்கு யாராவது துரோகம் செய்தால், துன்பம் விளைவித்தால் அதை புகாராக எழுதியும் திங்கட்கிழமைகளில் பிரம்மராயர் சுவாமி முன் வைத்துவிட்டு பின்னர் அந்த குதிரைகளில் காலில் கட்டி விடுகிறார்கள்.

இந்நிலையில் பிரம்மராயர் தனது தளபதியான வீரனாரிடம் பக்தர்களின் கோரிக்கைகள் குறித்து எடுத்துரைப்பார். உடனே வீரனார் பக்தர்களின் பிரச்சினைகள் பற்றி விசாரிக்கும்படி தன் சிப்பாய்களான இரண்டு குதிரைகளுக்கு உத்தரவிடுவார். தவறு செய்தவர்கள் கனவில் இந்தக் குதிரைகள் தோன்றி அவர்கள் செய்த தவறுகளைச் சுட்டிக்காட்டி திருந்தச் செய்வார்களாம். பிரிந்த தம்பதியர் ஒன்று சேரவும், குடும்பத்தில் ஒற்றுமை நிலவவும், குழந்தை பாக்கியம் கிட்டவும் கூட சீட்டு கட்டி பிரார்த்தனை செய்து பலன் பெறுகிறார்கள். குழந்தை பாக்கியம் பெற்ற தம்பதிகள் தங்கள் குழந்தைகளுக்கு பெயர் சூட்டும் விழாவையும் இங்கே நடத்துகிறார்கள்.

கோயிலுக்கு வருபவர்கள் பூமாலை, நாட்டுசர்க்கரை, எலுமிச்சம்பழம் நெய், வஸ்திரங்கள் மட்டுமே வாங்கி வர வேண்டும். பக்தர்கள் சார்பில் நாட்டு சர்க்கரை எலுமிச்சம் பழம் மட்டுமே பிரம்மராயருக்கு நிவேதனமாகப் படைக்கப்படுகிறது. நாட்டு சர்க்கரையி, பாதி அளவைத்தான் பக்தர்கள் வீட்டுக்கு எடுத்துச் செல்வார்கள். மீதியை அங்கேயே பிரசாதமாக வழங்கி விடுவார்கள். வீட்டுக்கு எடுத்துச் சென்ற நாட்டு சர்க்கரையை தண்ணீரில் கலந்து குடும்பத்தில் உள்ளவர்கள் அருந்தினால் ஆரோக்கியம் நன்றாக இருக்கும், நோய் நொடிகள் அண்டாது என்று அவர்கள் நம்புகின்றனர். அதுபோல பிரம்மராயர் சுவாமிக்கு பூஜை செய்த எலுமிச்சம் பழத்தை வீட்டின் வாசல் படியில் வைத்து விட்டால் கண் திருஷ்டிகள் அகலும், எந்த விதமான தீய சக்தியும் அணுகாது, குடும்பத்தில் நிம்மதி நிலவும் என்றும் நம்புகின்றனர்.

இந்த ஆலயத்தில் அரச மரத்தடி விநாயகர், நவகிரகங்கள், ஆஞ்சநேயர், துர்க்கை, சப்த கன்னியர், ரேணுகாதேவி, சுப்பிரமணிய சுவாமி, நாகர்களுடன் விநாயகர் சந்நிதியும் உண்டு.