பக்தர்களுக்கு சர்க்கரைப் பால் பிரசாதம்! திருப்பரங்குன்றம் கோவிலில் காலை முதல் இரவு வரை! ஏன் தெரியுமா?

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் இன்று முதல் செவ்வாய்க்கிழமை தோறும் காலை 6 மணி முதல் இரவு வரை இலவச பிரசாதங்கள் கொடுக்கும் நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.


தமிழ்நாட்டில் உள்ள அனேக கோவில்களில் பக்தர்களுக்கு இலவச பிரசாதம் கொடுக்கும் நடைமுறை அமல்படுத்தப்பட்டு வருகிறது. மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் பக்தர்களுக்கு இலவச லட்டு பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது.

இதேபோன்று திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் இன்று முதல் செவ்வாய்க்கிழமை தோறும் காலை முதல் இரவு வரை சர்க்கரை கலந்த காய்ச்சிய பால் பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

அறுபடை வீடுகளில் முதன்மை வீடானது திருப்பரங்குன்றம். இங்கு மூலவருக்கு அபிஷேகம் செய்யும் முறை இல்லை. அதற்கு பதிலாக மூலவர் கையிலிருக்கும் தங்க வேலுக்கு பால் அபிஷேகம் செய்யப்படும். அவ்வாறு அபிஷேகம் செய்யப்பட்ட பாலை பக்தர்களுக்கு பிரசாதமாக இலவசமாக வழங்கப்படும். இன்று முதல் இந்த முறை அமலுக்கு வர உள்ளது.

இதுகுறித்து கோயில் நிர்வாகிகள் கூறுகையில், "இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளிடம் உரிய அனுமதி பெற்று  இந்த முறை அமல்படுத்தப்பட்டு வருகிறது. செவ்வாய்க்கிழமை அன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் முருகனுக்கு பாலபிஷேகம் செய்கின்றனர். அபிஷேகம் செய்யப்பட்ட பாலை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்க முடிவெடுத்துள்ளோம். பால் குறையும் போது உற்பத்தியாளர்களிடமிருந்து வாங்குவதற்காகவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன" என்று கூறியுள்ளார்.

அபிஷேக பாலை பருகிய பக்தர்கள் அனைவரும் பக்தி மயமாக முருகனை வழிபட்டனர். இந்த சம்பவமானது திருப்பரங்குன்றம் கோவிலில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.