ஆயுஷ்ய ஹோமம் செய்தால் சொர்க்கம் கிடைக்குமா? ஆயுஷ்ய ஹோமத்தால் என்னென்ன தோஷங்கள் தீரும்..?

சகல வசதிகளுடனும் உடல் ஆரோக்கியத்துடனும் நன்றாக வாழ்ந்து இந்த வாழ்க்கையை நமக்கு கொடுத்த இறைவனுக்கு நன்றி செலுத்த ஒவ்வொரு ஆண்டும் ஆயுஷ்ய ஹோமம் செய்ய வேண்டும்.


ஒருவரது ஜாதகத்தில் ஆயுள் பற்றி தான் முதலில் பார்ப்பார்கள் ஜோதிட அறிஞர்கள். நாட்டையே கட்டியாளும் இராஜயோகம் இருந்தாலும் ஆயுள் பலம் இல்லையெனில் அதனால் எவ்வித பிரயோஜனமும் இல்லை. 12 வயது ஆகும்வரை ஒருவரது ஆயுளை நிச்சயிக்க முடியாது என்கிறது ஜோதிட கணிப்பு. ஒரு குழந்தையின் ஆயுளில் முதல் நான்கு வயது வரை அம்மாவின் கர்மா பாதிப்பு ஏற்படுத்துகிறது. அடுத்த நான்கு வயது வரை அப்பாவின் கர்மாவும், அடுத்த நான்காண்டுகள் கிரகங்களின் தோஷங்களும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. ஆகவே 12 வயது வரை வாழ்க்கை நிச்சயமில்லாதது.

பூரண ஆயுசு எனப்படும் நூறு வயது வரையிலான நிம்மதியான வாழ்க்கையே பலரது லட்சியம். அதை அடைய முடியாமல் பாதிப்பை ஏற்படுத்தும் விஷயங்கள் ஒவ்வொரு பருவத்திலும் உண்டு. அதர்வவேதம் பூரண ஆயுள் எப்படி இருக்க வேண்டும் என வரையறுக்கிறது. ஆத்மா இருக்கும் காலம் வரை சரீரமும் உற்சாகமாக இருக்க வேண்டும். இறக்கும்வரை சகிப்புத்தன்மையோடு வாழவேண்டும். தர்மம் அர்த்தம், காமம், மோட்சம் ஆகிய புருஷார்த்த லட்சணங்களை அடையும் விதமாக வாழ்க்கையும், தொழிலும், செயலும் நேர்மையான வழியில் இருக்க வேண்டும். இப்படி நூறு வயது வரை வாழ்கிறவர்கள் சொர்கத்தை அடைகிறார்கள் என்கிறது அந்த வேதம்.

அவ்வாறு நூறு வருஷம் நிம்மதியாக வாழ இறைவனிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும். இந்த பிரார்த்தனைகளில் முதன்மையானது தான் ஆயுஷ்ய ஹோமம்.