வேட்பாளர் பட்டியல் வருவதற்கு முன்னரே காங்கிரஸில் கடும் மோதல்... தி.மு.க. வெற்றிக்கும் ஆப்புத்தான்

தி.மு.க. கூட்டணியில் மிகவும் சிரமப்பட்டும் 25 தொகுதிகளை காங்கிரஸ் கட்சி வாங்கியிருக்கிறது. அந்த சீட்களைக் கேட்டு கடும் மோதல் கட்சிக்குள் நிலவுகிறது


இந்த நிலையில், வெளிப்படையாக இந்த மோதல் வெடித்துள்ளது. 

 விஷ்ணு பிரசாத் எம்.பி. காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் ஏராளமான குளறுபடிகள் நடந்து இருப்பதாகவும், இந்த பட்டியல் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதாகவும் கூறி இன்று காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் தனது ஆதரவாளர்களுடன் உண்ணாவிரதத்தை தொடங்கினார்.காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் கட்சிக்காக உழைத்தவர்களும், விசுவாசமாக இருந்தவர்களும் புறக்கணிக்கப்பட்டு உள்ளார்கள். மாற்று கட்சிகளில் இருந்து வந்தவர்கள், சீட் தராவிட்டால் விலகி விடுவேன் என்று மிரட்டியவர்கள் ஆகியோருக்கு முன்னுரிமை கொடுத்துள்ளார்கள்.

உதாரணமாக சோளிங்கர் தொகுதிக்கு முனிரத்தினம் என்பவரை வேட்பாளராக தேர்வு செய்து டெல்லிக்கு அனுப்பி உள்ளார்கள். அவர் பா.ம.க.வில் இருந்து 2016-ல் காங்கிரசுக்கு வந்தார். 

அப்போது நடைபெற்ற தேர்தலில் அவருக்காக ஒரு தொகுதியை மாற்றி சோளிங்கர் தொகுதி வாங்கி கொடுத்தார்கள். ஆனால் அவர் அந்த தேர்தலில் தோற்றார்.

இந்த நிலையில் தி.மு.க.வுக்கு சென்று விட்டு மீண்டும் காங்கிரசுக்கு வந்தார். இந்த தேர்தலிலும் சோளிங்கர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு தராவிட்டால் கட்சியை விட்டு விலகி விடுவதாக மிரட்டி இருக்கிறார். அதனாலேயே அவருக்கு சீட் வழங்க முடிவு செய்துள்ளார்கள். அதே போல் பல தலைவர்கள் கட்சிக்காக உழைக்காத தங்கள் பிள்ளைகளுக்கு சீட் வாங்கி இருக்கிறார்கள். ஒரு எம்.பி. தனது மாமனாருக்கே சீட் வாங்கி இருக்கிறார்.

இப்படி மாமனார், மாமியார், அண்ணன்-தம்பி, மகன், மருமகன் என்று ஒவ்வொருவரும் தொகுதிகளை பங்கு வைத்துக் கொண்டால் கட்சிக்காக உழைத்தவர்களுக்கு எப்படி வாய்ப்பு கிடைக்கும்.

தற்போது காங்கிரஸ் தயாரித்துள்ள பட்டியலில் ஏகப்பட்ட குளறுபடிகள் உள்ளன. எனவே டெல்லி மேலிடம் இதில் தலையிட வேண்டும் என்று கோரியிருக்கிறார். ஆனால், இவருக்கு எதிராக அழகிரியின் ஆட்கள் போராடி வருகிறார்கள். 

இப்படி கட்டிப்புரண்டா... தி.மு.க. கூட்டணி அம்புட்டுத்தான்.