டீன் ஏஜ் பருவத்தில் நுழைந்ததும் தன்னை அழகு படுத்திக் கொள்ள பெண் பிள்ளைகள் அபரீத ஆசை காட்டுவதுண்டு.
டீன் ஏஜ் காலத்தில் பியூட்டி பார்லர் போகாமல் எப்படி அழகை பாதுகாக்க வேண்டும் தெரியுமா?
இந்த வயதிலேயே பியூட்டி பார்லருக்குப் போய் ஃபேஷியல், பிளீச் போன்ற அலங்காரம் செய்ய வேண்டும், எந்நேரமும் பளீச்சென்று இருக்க வேண்டும் என்று விரும்புவது பருவ இயற்கை. ஆனால், இது அதற்கான வயதல்ல என்பதை உணர வைக்க வேண்டியது மிக அவசியம். ஏனென்றால், இந்த வயதில் அவர்களது சருமம் இயற்கையிலேயே பொலிவுடன் திகழும். இதனை செயற்கை பொருட்கள் கொடுத்து கெடுக்காமல் இருந்தாலே போதுமானது.
ஆனாலும் பரத நாட்டியம் அல்லது திருமணம் போன்ற விஷேசங்களுக்குப் போகும் போது அல்லது பருவினால் பாதிக்கப்பட்டவர்கள் அழகு நிலையம் செய்ய ஆசைப்படுவதுண்டு. அப்படி செய்தே தீர வேண்டும் என்றால் அவர்கள் மினி ஃபேஷியல் செய்து கொள்ளலாம். இதனை 13 வயது முதல் 19 வயதுக்குட்பட்டவர்கள் செய்து கொள்ளலாம். இந்த வயதில் பலருக்கு பருக்கள் ஏற்படுவது இயற்கை. அதனை எப்படியாவது அகற்ற வேண்டும் என்ற ஆர்வத்தில் அவ்வப்போது கிள்ளி விடுவார்கள். அப்படி பருக்களைக் கிள்ளிவிட்டால் மேலும் மேலும் பரவத்தான் செய்யும். மூக்கின் இருபுறமும், தாடைகளிலும், மேவாயிலும், கருப்பு வெள்ளைப் புள்ளிகள் சிலருக்குத் தோன்றக்கூடும். இவை எல்லாமே முகத்தில் அழுக்குச் சேருவதால் தோன்றுவது ஆகும். இதனை வீட்டிலேயே சரி செய்து கொள்ள முடியும்.
ஒரு பாத்திரத்தில், நன்றாக ஆவி பறக்கும் சூட்டில் நீரை வைத்துக் கொண்டு, தலைமுடிப்பகுதி, காதுப்புறங்கள் ஆகியவற்றை மூடி, முகம் நன்றாக படும்படி 3 முதல் 5 நிமிடம் வரை கண்களை மூடிக் கொண்டு ஆவி பிடிக்க வேண்டும். முகம் முழுவதும் வியர்த்து, முகத்திலிருந்து அழுக்குகள் வெளியே வந்து விடும். ஒரு துண்டை எடுத்து, முகம் முழுவதும் அழுத்தித் துடைத்து அழுக்கை நீக்கிவிடவும். அதன்பின்னர், முல்தானிமட்டியை பன்னீரில் குழைத்து, முகம், கழுத்து ஆகிய பகுதிகளில் தடவி, 15 நிமிடங்கள் கழித்து, ஈர துண்டு வைத்து துடைக்க வேண்டும். இதன்பின் தேவையெனில் ஐஸ் கட்டியை முகத்தில் பரவலாகத் தேய்த்துக் கொள்ளலாம்.