இனி ரூ.10, ரூ.20 ரீசார்ஜ் இல்லை! வாடிக்கையாளர்களை அதிர வைத்த செல்ஃபோன் சேவை நிறுவனம்!

சென்னை: ஆன்லைன் வழியாக, ரூ.10, ரூ.20 ரீசார்ஜ் செய்வதை, பிஎஸ்என்எல் ரத்து செய்துள்ளது.


மத்திய அரசுக்குச் சொந்தமான பிஎஸ்என்எல் நிறுவனம், ஆந்திரா மற்றும் தெலுங்கானா தொலைத்தொடர்பு வட்டங்களில், ஆன்லைன் வழியாக ரூ.10, ரூ.20 ரீசார்ஜ் செய்வதை ரத்து செய்வதாக, அறிவித்துள்ளது. இந்த பகுதிகளை தவிர, மற்ற இடங்களில், பிரிபெய்ட் ரீசார்ஜ் செய்ய, ரூ.10, ரூ.20 பேக்குகள் செல்லுபடியாகும் எனவும் கூறப்பட்டுள்ளது. ஆன்லைன் வழியாக ரீசார்ஜ் செய்ய முடியாவிட்டாலும், கடைகளில் நேரடியாகச் சென்று, இந்த கட்டணங்களுக்கு ரீசார்ஜ் செய்துகொள்ளலாம். 

கடந்த டிசம்பரில், வோடஃபோன், ஏர்டெல் போன்ற நிறுவனங்கள், ஒவ்வொரு சிம் கார்டுக்கும் மாதாந்திரம் குறைந்தபட்சம் ரூ.35 பேலன்ஸ் வைத்திருக்க வேண்டும் எனக் கூறி, புதிய திட்டத்தை அமல்படுத்தின. இதன்படி, ரூ.10, ரூ.20, ரூ.30 ரீசார்ஜ் கூப்பன்களை பல இடங்களில் ரத்து செய்வதாகவும், இந்நிறுவனங்கள் தெரிவித்தன.

இதன்படி, பிஎஸ்என்எல் நிறுவனமும், புதிய கட்டண விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது. இந்நிறுவனம் வழங்கும் ரூ.35, ரூ.53, ரூ.395 ஆகிய டேட்டா வவுச்சர்களும் திருத்தியமைக்கப்பட்டுள்ளன. ரூ.35க்கு டேட்டா ரீசார்ஜ் செய்தால், இதற்கு முன் 200 எம்பி டேட்டா வழங்கப்பட்டது. இது தற்போது,  5 நாட்களுக்கு, 5 ஜிபி டேட்டாவாக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல, ரூ.53க்கு 21 நாட்களுக்கு, 250 எம்பி டேட்டா வழங்கப்பட்டு வந்ததை மாற்றி, 14 நாட்களுக்கு 8 ஜிபி என மாற்றியுள்ளது.  

 இதுதவிர, ரூ.395க்கு செய்யப்படும் பிரிபெய்ட் ரீசார்ஜ் வவுச்சர், அன்லிமிடெட்,  டேட்டா, இன்கமிங், அவுட்கோயிங் மற்றும் நேஷனல் ரோமிங் சேவை அளித்து வந்தது. இந்நிலை மாறி, பிஎஸ்என்எல் சேவை எங்கு உள்ளதோ, அந்த இடங்களில் மட்டுமே இந்த சேவை தொடரும் எனக் கூறப்பட்டுள்ளது. இதன்படி, டெல்லி மற்றும் மும்பை பகுதிகளில், பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு சேவை கிடைக்காது என்றும், தெரிவிக்கப்பட்டுள்ளது.