கைது செய்யப்படுக்கிறாரா ப.சிதம்பரம்? முன் ஜாமீன் மறுப்பு விவகாரம்

கடந்த 5 ஆண்டு காலமும் ப.சிதம்பரத்தை சிறையில் தள்ளுவதற்காக பா.ஜ.க. பல்வேறு முயற்சிகளை எடுத்துவந்தது. ஆனால், அனைத்து வழக்குகளிலும் முன் ஜாமீன் பெற்று வந்தார். இந்த நிலையில் இன்று திடீரென முன் ஜாமீன் மறுக்கப்படவே, கைது செய்யும் அபாயம் இருக்கிறது.


கடந்த 2007-ம் ஆண்டில் மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் 305 கோடி ரூபாய் வெளிநாட்டு நிதியை பெறுவதற்கு, அந்நிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் ஒப்புதல் வழங்கியதில் முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த விவகாரத்தில் ஐ.என்.எக்ஸ். நிறுவனத்துக்கு சாதகமாக கார்த்தி சிதம்பரம் செயல்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. 

இதுதொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. அதனடிப்படையில், சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறையும் தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.  இந்நிலையில் இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி டெல்லி நீதிமன்றத்தில் முறையிட்டிருந்தார் ப.சிதம்பரம். 

சிதம்பரத்தின் முன் ஜாமீனுக்கு சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவரை கைது செய்து விசாரிக்க வேண்டிய கட்டாயம் இருப்பதாகவும் இரு அமைப்புகளும் தெரிவித்துள்ளன. அதைத் தொடர்ந்துதான் ப.சிதம்பரத்துக்கு முன் ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது. மூன்று நாட்களுக்குள் மேல் முறையீடு செய்வதற்கு சிதம்பரத்திற்கு அனுமதி கொடுக்கப்பட்டிருந்தாலும், எந்த நேரத்திலும் கைது செய்யப்படும் அபாயம் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.