நிதி அமைச்சர் அருண் ஜேட்லிக்கு அதி தீவிர புற்றுநோய்! சிகிச்சை அளிப்பதிலும் சிரமம்!

மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லிக்கு தீவிர புற்று நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் மூன்றாவது இடத்தில் இருப்பவர் அருண் ஜேட்லி. கடந்த ஐந்து ஆண்டுகளாக அவர் தான் மத்திய நிதி அமைச்சராக இருக்கிறார். மோடி அரசுக்கு எதிரான பிரச்சாரங்களை முறியடிக்கும் பேச்சாற்றல் மிக்கவர் அருண் ஜேட்லி. இதனால் தான் தேர்தலில் தோற்று இருந்தாலும் அவரை ராஜ்யசபா எம்.பியாக்கி நிதி அமைச்சர் ஆக்கினார் மோடி.

   பிரதமர் மோடி வெளிநாடு சென்ற நிலையில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் நாட்டில் இல்லை என்றால் பிரதமருக்கு உரிய அன்றாட பணிகளை கவனிக்கும் பொறுப்பு அருண் ஜேட்லியிடம் தான் இருக்கும் இந்த அளவிற்கு இந்திய அரசில் மிக முக்கிய பொறுப்பில் இருக்கும் ஜேட்லிக்கு கடந்த ஆண்டு சிறுநீரக பிரச்சனை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

  சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் தற்போது வரை ஜேட்லி முழுமையாக குணம் ஆகவில்லை. மாற்றப்பட்ட சிறுநீரகங்கள் அவருக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கும் வகையில் தற்போது தான் தயாராகி வந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஜேட்லிக்கு தொடையில் கடுமையான வலி ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் இரண்டு நாட்களுக்கு முன்னர் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார்.

   அப்போது அவருக்கு திசு புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. தற்போது தொடையில் உள்ள திசு புற்று அருண் ஜேட்லியின் மற்ற உறுப்புகளுக்கும் பரவும் தன்மை கொண்டது என்று கூறுகிறார்கள். இதனை தொடர்ந்து உடனடியாக அருண் ஜேட்லி அவசர அவசரமாக அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். அங்கு சென்று அறுவை சிகிச்சை மூலம் புற்று நோய்க்கு சிகிச்சை எடுத்து திரும்பலாம் என்பது ஜேட்லியின் திட்டம்.

   ஆனால் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து முழுமையாக குணம் அடையாத நிலையில் புற்று நோய்க்கான அறுவை சிகிச்சை செய்து கீமோ தெரப்பி கொடுப்பது என்பது இயலாத காரியம் என்று அமெரிக்க மருத்துவர்கள் கூறுகிறார்கள். இதனால் ஜேட்லிக்கு எந்த வகையான சிகிச்சையை அளிப்பது என்று மருத்துவர்கள் குழப்பம் அடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

   இதனிடையே ஜேட்லியின் உடல் நிலை குறித்து தான் மிகவும் வேதனை அடைந்துள்ளதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அரசியலில் எதிர் எதிர் துருவமாக இருந்தாலும் உடல் நிலை சரியில்லாத சமயத்தில் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் நாங்கள் எப்போதும் உறுதுணையாக இருப்போம் என்று ராகுல் கூறியுள்ளார். ஜேட்லியின் உடல் நிலை ராகுல் காந்தியை மட்டும் அல்ல மோடியையும் கவலை அடைய வைத்துள்ளது.

   ஏனென்றால் விரைவில் தேர்தல் வர உள்ள நிலையில் அருண் ஜேட்லி தான் பட்ஜெட்டை தாக்கல் செய்ய வேண்டும். ஆனால் அவர் உடல் நிலை பாதிக்கப்பட்டு அமெரிக்கா சென்றுள்ள நிலையில் பட்ஜெட்டை யார் தாக்கல் செய்வது என்கிற பிரச்சனை மோடி அரசுக்கு ஏற்பட்டுள்ளது.