சுபஸ்ரீ கோர மரணம்! நடிகர் அஜித் ரசிகர்கள் எடுத்த நெகிழ வைக்கும் முடிவு! குவியும் பாராட்டு!

சுபஸ்ரீ மரணத்தை படிப்பினையாக கொண்டு இனி வரும் காலங்களில் அஜித்திற்காக கட் அவுட்டோ, பேனரோ வைக்கப்போவதில்லை என்று அவரது மதுரை ரசிகர்கள் முடிவு எடுத்துள்ளனர்.


அதிமுக பிரமுகர் வைத்த பேனரால் இளம் பெண் சுபஸ்ரீயின் உயிர் அநியாயமாக பறிபோனது. இதனால் தமிழகம் முழுவதும் பேனர், கட் அவுட்டுகளுக்கு எதிரான பிரச்சாரம் தீவிரமாகியுள்ளது. ஒவ்வொரு கட்சியும் தங்கள் தொண்டர்களை கட்அவுட், பேனர் வைக்க வேண்டாம் என்று வலியுறுத்தி வருகிறது.

இந்த நிலையில் மதுரை மாவட்ட அஜித் ரசிகர்கள் சார்பில் மாநகரம் முழுவதும் போஸ்டர்கள் அடித்து ஒட்டப்பட்டுள்ளன. அதில் சகோதரி சுபஸ்ரீ மரணம் மிகுந்த வேதனை அளிக்கிறது, தவறு நடப்பதற்கு முன்பு நாம் சிந்தித்து செயல்பட வேண்டும் என்று ஒரு தவறு நிகழ்ந்த பிறகு தான் நமக்கு அறிவுறுத்துகிறது.

இனிமேலாவது சிந்தித்து செயல்படுவோம், அந்த சகோதரி ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திப்போம் என்று அந்த போஸ்டரில் கூறப்பட்டுள்ளது. மேலும் தல அஜித் படங்களுக்கு இனி அவர் புகழை பரப்பும் வகையில் எங்கும் பேனரோ கட் அவுட்டோ வைப்பதில்லை என்று முடிவெடுத்துக் கொள்வதாகவும் உறுதி மொழி ஏற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஜித் இது தொடர்பாக தனது ரசிகர்களுக்கு எந்த உத்தரவும் போடாத நிலையிலும் ரசிகர்கள் தாங்களாகவே எடுத்துள்ள முடிவு பல தரப்பிலும் இருந்து பாராட்டுகளை குவிக்கிறது.