பிகில் திரைப்படம் எப்படி இருக்கு? ஒரு நேர்மையான விமர்சனம்!

நடிகர் விஜயின் பிகில் திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று வெளியாகியுள்ளது.


விஜய் படம் என்றாலே ஸ்க்ரீன் பிரசன்ஸ் தான் சும்மா அள்ளும். அந்த வகையில் விஜய் ஸ்க்ரீனில் இருக்கும் அனைத்து காட்சிகளும் தெறிக்கவிடுகிறது. அதிலும் முதல் முறையாக விஜய் தாதா கேரக்டரில் நடித்துள்ளார். அவரது நடை, உடை, பேச்சு என அனைத்துமே செம மாஸ்.

ராயப்பன் – பிகில் என இரண்டு கேரக்டர்கள் இருந்தாலும் ராயப்பன் எப்போது ஸ்க்ரீனில் வருவார் என்று ரசிகர்களை எதிர்பார்க்க வைத்து இருக்கிறார்கள். அதே போல் ராயப்பன் வரும் ஒவ்வொரு சீனும் தியேட்டரில் விசில் சத்தம் காதை கிழிக்கிறது. ராயப்பனுக்கு அதிக ஹைப் கொடுக்கப்பட்டுள்ளதால் பிகில் கேரக்டர் பெரிய அளவில் நம்மை ஈர்க்கவில்லை.

அதிலும் எம்ஜிஆர் மேனரிசத்துடன் விஜய் செய்யும் சண்டை உண்மையில் கொல மாஸ் தான். அதிலும் படத்தில் பிகில் புட்பால் பிளேயர். அனைத்து காட்சிகளும் கிராபிக்ஸ்தான். அதுவும் ஒழுங்காகச் செய்திருக்கிறார்களா என்றால் நிச்சயமாக இல்லை. பார்க்கும் போதே கிராபிக்ஸ் என்பது நன்றாக தெரிந்துவிடுகிறது. அதிலும் புட்பால் கிரவுண்டை காட்டும் போது கார்ட்டூன் படங்களுக்கான அனிமேசன் போல் தெரிகிறது. 

பேக்கிரவுண்ட் மியுசிக்கில் ரகுமான் ஏனோ தடுமாறியிருக்கிறார். பாடல்கள் வரும் போது விஜய் ரசிகர்கள் சிலரே எழுந்து தம் அடிக்கச் சென்றனர். சண்டை காட்சிகளில் கொல மாஸ் இருந்தாலும், ஏன் இப்படி அடிச்சிக்குறாங்க என்கிற ஒரு கேள்வி எழுகிறது. நயன்தாரா – விஜய் கெமிஸ்ட்ரி ஒரு பெர்சன்டேஜ் கூட வொர்க் அவுட் ஆகவில்லை.

நயன்தாராவை படத்தில் டம்மியாக வைத்து இருக்கிறார்கள். யோகி பாபு காமெடி நிறைய இடங்களில் சிரிக்க வைக்கவில்லை. விளையாட்டு தொடர்பான கதை என்பதால் அடுத்த என்ன என்பதை நம்மால் யூகிக்க முடிகிறது. திரைக்கதை மிகப்பெரிய பலவீனம். அட்லி வழக்கம் போல் நிறைய படங்களில் இருந்து காட்சிகளை உருகி அதற்கு பட்டி டிங்கரிங் பார்த்து பிகிலில் படமாக்கியுள்ளார்.

படத்திற்கு பிளஸ் பாய்ன்ட் என்று பார்த்தால் விஜய் மட்டும் தான். அதற்கு அடுத்து ஒளிப்பதிவை சொல்லலாம். பிறகு சண்டை காட்சிகளை சொல்லலாம். அட்லியின் இதற்கு முந்தைய படங்களில் இருந்த எமோசன் இந்த படத்தில் சுத்தமாக இல்லை. அனைத்தும் மிகவும் செயற்கையாக உள்ளது. சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் விஜய், இந்த முறை அட்லியை நம்பி ஏமாந்துவிட்டார் என்றே சொல்லலாம்.

வழக்கமான கதையுடன் காக்டெயில் திரைக்கதையையும் கொஞ்சம் புட்பால் விளையாட்டையும் கலந்து ஒரு ஒயின் போல கொடுத்துள்ளார் அட்லி. வழக்கம் போல் முதல் பாதி விஜயின் மாஸ், காதல், சென்டிமென்ட் என்று கலவையாக சென்றாலும் இரண்டாவது பாதியில் ஒரு சில இடங்களில் அலுப்பு தட்டுகிறது. அதனை அவ்வப்போது விஜய் வந்து சரி செய்கிறார்.

ஆனால் இதனை எல்லாம் குடும்பம் குடும்பமாக மக்கள் பார்ப்பார்களா என்றால் சந்தேகம் தான். விஜய்க்காக வேண்டும் என்றால் இந்த படத்தை ஒரு முறை பார்க்கலாம்.

படத்திற்கு நிறைய செலவு செய்திருப்பது தெரிகிறது- ஆனால் அந்த செலவுக்கு ஒர்த்தான காட்சிகள் இருக்கிறதா என்றால் இல்லை. இருந்தாலும் தீபாவளியை ஒரு படத்தோடு கொண்டாட நினைப்பவர்கள் பிகில் திரையரங்கிற்கு செல்லலாம். ஒரு ரெண்டு மணி நேரம் பொழுது போகும்.