சென்னை: தமிழ் சினிமா வரலாற்றில் இல்லாத வகையில், தல அஜித் நடித்துள்ள விஸ்வாசம் படம் மிகப்பெரும் வசூல் சாதனை படைத்துள்ளது.
தமிழ் சினிமா வரலாற்றில் அதிக வசூல்! பாகுபலி 2 சாதனையை நெருங்கும் விஸ்வாசம்!
பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே, தல அஜித் நடிப்பில், சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படம், கடந்த மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த படத்திற்கு போட்டியாக, ரஜினிகாந்த் நடித்த பேட்ட படமும் வெளியானது. இரண்டு படங்களில் எது வெற்றி பெறும், எது தோல்வி பெறும் என பல தரப்பிலும் எதிர்பார்க்கப்பட்டது.
விமர்சகர்கள் பலரும் ரஜினி படமே வெல்லும் என்றும், விஸ்வாசம் தோற்றுவிடும் என்றும் கருத்து கூறி வந்தனர். இந்நிலையில், விஸ்வாசம் ரிலீஸ் ஆனது. மறுபுறம் பேட்ட படமும் ரிலீஸ் செய்யப்பட்டது. முதல் சில நாட்களுக்கு, பேட்ட படத்தின் வசூல், முன்னணியில் நிற்பதாக தகவல்கள் தெரிவித்தன.
ஆனால், நாட்கள் செல்ல செல்ல அஜித்தின் விஸ்வாசம் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம் நிரம்ப, தியேட்டர்களில் ஹவுஸ் புல் காட்சிகளாக சக்கை போடு போட தொடங்கியது. இதன்படி, படம் வெளியான 10 நாட்களிலேயே, பேட்ட படத்தின் வசூல் சாதனையை முறியடித்துவிட்டதாகக் கூறப்பட்டது.
எனினும், ரஜினி, விஜய் ரசிகர்கள் இந்த தகவலை மறுத்துவிட்டனர். இருந்தபோதிலும், விஸ்வாசம் யாரையும் எதிர்பார்க்காமல் தொடர்ந்து அரங்கம் நிறைந்த காட்சிகளாக, வெற்றி நடை போட்டு வருகிறது. தற்சமயம், விஸ்வாசம் படம் பாக்ஸ் ஆபிசில் 50 நாட்களை நிறைவு செய்துள்ளது.
இந்தியா மட்டுமின்றி, ஃபிரான்ஸ், இலங்கை, கனடா உள்ளிட்ட நாடுகளில், 50 நாட்களை கடந்து, விஸ்வாசம் ஓடிவருகிறது. படத்தின் வசூல், தற்போது தமிழக அளவில் ரூ.131.26 கோடியை கடந்துவிட்டதாக, தெரியவந்துள்ளது. இது தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸ் வரலாற்றில் எந்த தமிழ் படமும் செய்திராத புதிய சாதனையாக பார்க்கப்படுகிறது.
இதன்படி, பாக்ஸ் ஆபிஸ் வசூல் வரலாற்றில், அஜித் படம், தற்போது 2வது இடத்தில் உள்ளது. முதல் இடத்தில், பிரபாஸ் நடித்த பாகுபலி 2 ரூ.158.4 கோடியுடன் உள்ளது. எனினும், அஜித் படம் இன்னும் 10 நாட்கள் ஓடும்பட்சத்தில், பாகுபலி 2 சாதனையை முறியடித்து, முதல் இடத்தை பிடித்துவிடும் எனக் கூறப்படுகிறது.
இவ்வாறு நடந்தால், தல அஜித்குமார், தமிழக சினிமா வரலாற்றில் மிகப்பெரும் வசூல் சாதனை செய்த நபராக மாறிவிடுவார். அதேசமயம், விஸ்வாசத்திற்கு போட்டியாக வந்த ரஜினியின் பேட்ட படத்தின் வசூல் வெகுவாக பின்தங்கிவிட்டது. அதற்கு முன் ரஜினி நடித்த 2.0 படத்தின் வசூல் தமிழக அளவில் ரூ.128.8 கோடியாக உள்ளது.
இது தமிழக பாக்ஸ் ஆபிஸ் வரலாற்றில் 3வது மிகப்பெரிய வசூல் சாதனை என்பது குறிப்பிடத்தக்கது.