போலீஸ்காரங்களிடம் எவ்வளவோ சொன்னோம் கேட்கல..! மண்ணெண்ணெய் கேனுடன் அக்காள் - தங்கை செய்த விபரீத செயல்! தஞ்சை அதிர்ச்சி!

தஞ்சை மாவட்டத்தில் அக்கா தங்கை இருவரும் இணைந்து கலெக்டர் அலுவலகத்திற்கு முன்பு தீக்குளிக்க முயன்ற சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


வாரம்தோறும் தஞ்சையில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெறும். கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் மணிமேகலை தலைமை தாங்குவார். அவ்வாறாக இந்தவாரக் குறைதீர்க்கும் கூட்டம் நேற்றைய தினம் நடத்தப்பட்டது.

இந்த கூட்டத்தில் தஞ்சை மாவட்டத்திலுள்ள மக்கள் பலரும் பங்கேற்று தங்களுடைய குறைகளை மாவட்ட ஆட்சியரிடம் கூறினர். அப்படியாக சிவப்பிரியா  (வயது 38)  என்ற பெண் மெலட்டூர் அருகே உள்ள மேலகுளக்கரை கிராமத்தை சேர்ந்தவர். இவரது தங்கை தனலட்சுமி  (வயது 35)  ஆவார். 

நேற்றைய தினம் இவர்கள் இருவரும் குறைதீர்க்கும் கூட்டத்தில் பங்கேற்றனர். திடீரென்று சிவப்பிரியா தன் பையில் மறைத்து வைத்திருந்த மண்எண்ணெய் கேனை எடுத்து தன் மீதும் தன் தங்கை தனலட்சுமி மீதும் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதை பார்த்த மாவட்ட ஆட்சியர் போலீசார் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக அங்கிருந்த போலீசார் அவர்கள் இருவர் மீதும் தண்ணீர் பிடித்து ஊற்றினர். பின்னர் போலீசார் இந்த தற்கொலைக்கான காரணத்தை கேட்டறிந்தனர். அதாவது சிவப்பிரியாவின் மகன் பாலாஜியை கடந்த 22-ம் தேதி 9 பேர் கொண்ட மர்ம நபர்கள் சரமாரியாக அடித்து தாக்கியுள்ளனர். பாலாஜி படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சிவப்பிரியா தன் மகனை அடித்த அந்த மர்ம நபர்கள் மீது போலீசிடம் புகார் அளித்திருக்கிறார். ஆனால் போலீசார் இந்த வழக்கில் எந்தவித முன்னேற்றமும் காட்டவில்லை. இதனால் ஆத்திரமடைந்த சிவப்பிரியா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பு தீக்குளிக்கலாம் என முடிவெடுத்து வந்திருக்கிறார்.

இவ்வாறாக ஸ்ரீபிரியா தனக்கு நேர்ந்த அநீதியைப் பற்றி கூறினார். பின்னர் போலீசார் சிவப்பிரியா மற்றும் அவரது தங்கை தனலட்சுமி ஆகியோரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு வைத்து அவர்கள் இருவரையும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கலெக்டர் அலுவலகத்திற்கு முன்பு இத்தகைய செயலில் ஈடுபட்டதை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.