படகு கவிழ்ந்து கோர விபத்து! அப்பாவி மக்கள் எட்டு பேர் பலியான பரிதாபம்!

கர்நாடகா மாநிலத்தில், ஆற்றில் படகு கவிழ்ந்து 8 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கர்நாடகாவின் வடக்கே, அரபிக் கடலை ஒட்டி, கோவாவுக்கு அருகே காளி ஆறு ஓடுகிறது. இங்குள்ள கர்வார் பாலம் பகுதியில், படகு பயணம் நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் இதில் பயணிப்பது வழக்கம். இதன்படி, இன்று (ஜனவரி 21) 26 பேரை ஏற்றிக் கொண்ட, படகு ஆற்றின் நடுவே சென்றுகொண்டிருந்தபோது, திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

 

இந்த தகவல், இந்திய கடற்படைக்கு தெரிவிக்கப்பட்டு, உடனடியாக, மீட்புக்குழுவினர் அங்கு விரைந்தனர். கடற்படையும், கடலோர பாதுகாப்புப் படையும் இணைந்து, தீவிரமாக மீட்புப் பணியை மேற்கொண்டனர்.

 

இதில், படகில் இருந்த 26 பேரில், 17 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். எஞ்சிய 9 பேரில், 8 பேர் பரிதாபமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர். அவர்களின் சடலங்களை மீட்டுள்ள மீட்புப் படையினர், மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.  

 

மீட்புப் பணியில், கப்பல்கள் மட்டுமின்றி, ஹெலிகாப்டரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக, கடற்படை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீட்புப் பணி தொடர்பான வீடியோ காட்சி ஒன்றையும் கடற்படை வெளியிட்டுள்ளது. முன்னதாக, இந்த படகில் பயணித்த அனைவரும்உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்பட்டது.

 

அதேசமயம், காலாவதியான படகை , போக்குவரத்துக்கு பயன்படுத்தியதாகவும் புகார் கூறப்படுகிறது. விபத்துக்குள்ளான படகில் பயணித்தவர்கள் அனைவரும், கர்வார் கடலோரம் அமைந்துள்ள குருமகாடா தீவில் நடைபெற்ற நரசிம்ம சாமி கோயில் திருவிழாவில் பங்கேற்றுவிட்டு திரும்பியுள்ளனர். இதன்போதே, எதிர்பாராமல் விபத்து ஏற்பட்டுள்ளதாக, பொதுமக்கள் குறிப்பிடுகின்றனர்.