மீண்டும் ஒரு சுர்ஜித்? ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த குழந்தை! உயிருடன் மீட்க போராட்டம்!

ராஜஸ்தான் மாநிலத்தில் 5 வயது குழந்தை ஒன்று மூடப்படாமல் இருந்த ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்து உயிருக்கு போராடி வருகிறது.


ராஜஸ்தான் மாநிலத்தில் சிரோஹி என்னும் மாவட்டத்தில் அமைந்திருக்கும் கிராமம் ஒன்றில் மூடப்படாமல் இருந்த ஆழ்துளை கிணற்றில் 5 வயது குழந்தை ஒன்று தவறி விழுந்து விட்டது.

குழந்தை விழுந்த தகவல் அறிந்ததும் அதனை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்தக் குழந்தை ஆழ்துளை கிணற்றில் தற்போது 15 அடி ஆழத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குழந்தையைக் காப்பாற்றுவதற்காக பக்கவாட்டில் பொக்லைன் இயந்திரத்தை பயன்படுத்தி பெரிய பள்ளம் தோண்டப்படுகிறது. மேலும் அந்தக் குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்படாமல் இருப்பதற்காக மேல் இருந்து குழாய் மூலம் ஆக்சிஜன் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த தகவல் அறிந்ததும் அப்பகுதி போலீசார் மற்றும் அந்த மாவட்ட ஆட்சியர் ஆகியோர் விரைந்து வந்துள்ளனர். மேலும் குழந்தையை மீட்கும் பணி துரிதமாக செயல்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

பேரிடர் மீட்புக் குழுவினருக்கு தகவல்கள் வழங்கப்பட்டுள்ளது. அவர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். அதேபோல் மருத்துவ குழுவும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த சுர்ஜித் இம்மாதிரியான மூடப்படாத ஆழ்துளை கிணற்றில் இருந்து பல மணி நேரப் போராட்டத்திற்குப் பின்பு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் நம் மனதை விட்டு நீங்காத வடுவாக இருக்கும் இந்நிலையில் மீண்டும் இதேபோல் சம்பவம் நடைபெறுவது நம்முடைய அலட்சியம் என்பது என்று தான் கூற வேண்டும்.