நம்பி அனுப்பி வச்சேன்! சொந்த காரணுங்களே இப்படி பண்ணிட்டானுங்களே! கதறும் 4 வயது சிறுமியின் தாய்!

திருவள்ளூர் அருகே காணாமல்போன 4 வயது சிறுமி பலத்த காயங்களுடன் சடலமாக முட்புதரிலிருந்து மீட்கப்பட்டது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.


வெள்ளவேட்டிலுள்ள  செங்கல் சூளையில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 25 பேர்  தங்கி வேலை செய்து வருகின்றனர். அவர்களில் ஒரு தம்பதியின் 4 வயது மகளை அவர்களுடைய உறவினர்களான நிலக்கர், சந்தரவனம் ஆகியோர் நேற்று பிற்பகலில் கடைக்கு அழைத்து செல்வதாகக் கூறி அழைத்துச் சென்றனர். 

மாலை வரை அவர்கள் வீடு திரும்பாததால் சிறுமியின் தந்தை அவர்களைத் தேடிச் சென்றார். அப்போது மது அருந்திக் கொண்டிருந்த நிலக்கரும், சந்தரவனமும் குழந்தை குறித்த கேள்விக்கு முறையாக பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து சிறுமியின் தந்தை, உறவினர்களுடன் சேர்ந்து இரவு முழுதும் மகளைத் தேடியும் கிடைக்காததால் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் செங்கல் சூளையின் பின்புறமுள்ள முட்புதரில் பலத்த காயங்களுடன் சிறுமி சடலமாகக் கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து நிலக்கர், சந்தரவனம் உள்ளிட்ட 3 பேரை கைது செய்துள்ள போலீசார், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டாரா என விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

மகளை நம்பிக்கையுடன் உறவினர்களுடன்  அனுப்பி வைத்ததாகவும் சடலமாக முட்புதரிலிருந்து மீட்கப்பட்டுள்ள மகளை என்ன செய்தார்கள் எனத் தெரியவில்லை என்றும் சிறுமியின் தாய் கதறியது பரிதாபத்துக்குரியதாக இருந்தது.