வீட்டு தோட்டத்திற்கு தந்தை வெட்டிய குட்டை! மழையால் நீர் நிரம்பி மகனுக்கு எமனான பரிதாபம்! ஈரோடு விபரீதம்!

ஈரோடு அருகே தோட்டத்தில் உள்ள சிறிய குட்டையில் விழுந்த 4 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


ஈரோடு மாவட்டம் திகினாரை கிராமத்தைச் சேர்ந்த செல்வகுமார் வனிதா தம்பதிக்கு அர்ஷித் எனும் 4 வயது சிறுவனும், எட்டு மாத பெண் குழந்தையும் இருக்கின்றனர். 

தோப்பு வீட்டில் வசித்து வரும் இந்த குடும்பத்தினர், நீர் பயன்பாட்டிற்கு தோட்டத்தில் 8 அடி நீளமும், 3 அடி ஆழமும், 2 ஆதி அங்குலமும் கொண்ட சிறிய குட்டை ஒன்றை வெட்டி பயன்படுத்தி வந்தனர். 

இந்நிலையில், தோட்டத்தில் விளையாடிக்கொண்டு இருந்த சிறுவன், காணாமல் போனதால் செல்வகுமார் பதறியடித்து தோட்டத்தைச் சுற்றி தேடி வந்தார். 

தற்செயலாக வெட்டிவைத்த குட்டையை எட்டிப் பார்க்கையில் சிறுவன் மூழ்கிய நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக ஆம்புலன்ஸை வரவழைத்து அருகிலிருந்த மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று பரிசோதித்து பார்த்ததில், சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டார் என கூறியுள்ளனர். 

சுஜித் எனும் சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவத்தில் இருந்து மீண்டு வராத நிலையில், தற்போது மீண்டும் அர்ஷித் எனும் சிறுவன் உயிரிழந்த சம்பவம் கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.