ஜெபக்கூட்டத்துக்கு கும்பலாக சென்ற பக்தர்கள் கூட்டத்தில் பாய்ந்த அம்பாசிடர் கார்! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பெண்கள் துடிதுடித்து உயிரிழந்த சோகம்!

தஞ்சை அருகே ஜெபக் கூட்டத்திற்கு கும்பலாக சென்ற பக்தர்கள் கூட்டத்தில் திடீரென்று கார் புகுந்ததால் பெங்களூரை சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.


தஞ்சை அருகே உள்ள வல்லத்தில் பல்கலைக்கழகம் அருகே ஜெபக்கூடம் உள்ளது. நேற்று அங்கே பொங்கலை ஒட்டி சிறப்பு ஜெப வழிபாடு நடந்தது. இந்த கூட்டத்தில் பங்குபெற பல்வேறு வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் குவிந்தனர். இந்நிலையில் வல்லம் புதூர் பகுதியில் உள்ள குளத்தில் குளித்து விட்டு ஜெபக் கூடத்திற்கு செல்வதற்காக 50க்கும் மேற்பட்ட பக்தர்கள் திருச்சி சர்வீஸ் ரோட்டில் நேற்று இரவு நடந்து சென்று கொண்டிருந்தனர் .

அந்த நேரத்தில் அந்த சாலையில் வந்து கொண்டிருந்த காரில் திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த சத்யநாராயணன் என்பவர் தனது தந்தை தாயுடன் வந்து கொண்டிருந்தார். திடீரென அவர்கள் பயணம் செய்து வந்த கார் கண்ணிமைக்கும் நேரத்தில் சாலையோரம் ஜெபத்திற்கு நடந்து கொண்டிருந்த பக்தர்கள் மீது பாய்ந்தது. இதனால் அந்த கூட்டத்தில் இருந்த பக்தர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். 

எனினும் அந்தக் கூட்டத்தில் கார் மோதியதில் பெங்களூருவை சேர்ந்த செல்வி ,கவிதா, கீர்த்தி, கன்னியம்மாள் மற்றும் பலர் மீது கார் மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே செல்வி , கவிதா ஆகியோர் உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த கீர்த்தி கன்னியம்மாள் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

காரை ஓட்டி வந்த சத்யநாராயணா அவரது பெற்றோர் மற்றும் 7 க்கும் மேற்பட்ட சாலையில் பயணம் செய்த பக்தர்கள் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கோர சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.