பழனியின் அடையாளங்களில் ஒன்றாக திகழும் கந்தவிலாஸ் மற்றும் சித்தநாதன் பஞ்சாமிர்த கடைகளில் கடந்த இரண்டு நாட்காளக வருமான வரித்துறை தீவிர சோதனை நடத்தி வருகிறது.
மாதம் ரூ.30 கோடி டர்ன் ஓவர்! கந்தவிலாஸ், சித்தநாதன் பஞ்சாமிர்த கடைகளை குறி வைத்த வருமான வரித்துறை!
பழனிக்கு வரும் பக்தர்கள் தவறாமல் வாங்கிச் செல்வது பஞ்சாமிர்தம். பழனி பஞ்சாமிர்தம் அவ்வளவு ருசியாக இருக்கும். மேலும் பழனி என்றால் முருகனுடன் பஞ்சாமிர்தமும் நினைவிற்கு வரும். அந்த அளவிற்கு பழனிக்கு பஞ்சாமிர்தம் பெருமை சேர்த்து வருகிறது.
பழனி மலைக் கோவிலில் தேவஸ்தானம் சார்பில் பஞ்சாமிர்த கடை உள்ளது. இங்கு ஒரு மாதத்திற்கு சுமார் 5 கோடி ரூபாய் அளவிற்கு டர்ன் ஓவர் இருக்கும் என்று சொல்கிறார்கள். அதே சமயம் மலை அடிவாரத்தில் செயல்பட்டு வரும் இரண்டு கடைகள் கந்தவிலாஸ் மற்றும் சித்தநாதன்.
நூறாண்டுகள் பாராம்பரியம் கொண்ட கடைகள் இவை என்று கூறப்படுகின்றன. மலைக் கோவிலில் உள்ள தேவஸ்தான கடையில் ஒரு மாதம் ரூ.5 கோடி டர்ன் ஓவர் என்றால் இ ந்த இரண்டு கடைகளிலும் மாதம் ஒன்றுக்கு தலா ரூ.15 கோடி என 30 கோடிக்கு டர்ன் ஓவர் காட்டுவதாக சொல்கிறார்கள்.
இந்த அளவிற்கு கந்தவிலாஸ் மற்றும் சித்தநாதன் கடைகளில் வியாபாரிம் களை கட்ட அங்கு விற்பனையாகும் பஞ்சாமிர்தத்தின் ருசி மற்றும் தரம் தான் முக்கிய காரணம். இப்படி கூட்டம் அலைமோதுவதால் பழனியில் தனியாக பஞ்சாமிர்த ஆலையே தனியாக இந்த இரண்டு கடைகளும் நடத்தி வருகின்றன.
மேலும் விபூதியும் இந்த இரண்டு கடைகளிலும் செம பேமஸ். பழனி செல்பவர்கள் விபூதி வாங்க வேண்டும் என்றால் கந்தவிலாஸ் மற்றும் சித்தநாதன் கடைகளை தேடிச் செல்வார்கள். தற்போது ஹோட்டல், கல்யாண மண்டபம் என தங்கள் தொழிலை இந்த இரண்டு கடைகளும் விரிவு படுத்திவிட்டன.
ஆனால் முறையாக வருமான வரி செலுத்துவதில்லை என்கிற புகார் எழுந்தது. இதன் அடிப்படையில் தான் கந்தவிலாஸ் மற்றும் சித்தநாதன் பஞ்சாமிர்த கடைகளை நோண்டி நொங்கு எடுக்கிறார்களாம் வருமான வரித்துறை அதிகாரிகள். சுமார் 100 பேர் இரவு பகலாக அங்கு ரெய்டு நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.